(நா.தனுஜா)
கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரேவழி பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் பரவலைக் கட்டுப்படுத்துவதுமேயாகும்.
நாட்டை முடக்கும் அதேவேளை மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் ஊடாக மாத்திரமே, அதன் முழுப்பயனையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்று சுகாதாரக்கொள்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியநிபுணர் ரவி ரன்னன் எலிய சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கையைப் பொறுத்தவரை கொவிட் - 19 வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் விவகாரத்தில் பொருத்தமான தலைமைத்துவமின்மையும் பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை உணராமையும் பாரிய குறைபாடாகும் என்று தெரிவித்துள்ள அவர், பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை சுகாதாரப்பிரிவினர் இன்னமும் புரிந்துகொள்ளமையானது எதிர்காலத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் செயற்திறன் பற்றிய கலந்துரையாடலொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
கேள்வி - நாட்டில் நாளாந்தம் அடையாளங்காணப்படும் கொவிட் - 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் நாம் எங்கு தவறிழைத்திருக்கின்றோம்?
பதில் - கொவிட் - 19 வைரஸ் பரவலைப் பொறுத்தவரை, ஒரு வருடத்திற்கு முன்னர் காணப்பட்டதை விடவும் தற்போது எமது நாடு மிகவும் மோசமான நிலையிலிருக்கின்றது.
உலகளாவிய ரீதியில் இந்தத் தொற்றுப்பரவல் தீவிரமடைந்திருக்கின்றது என்றே கூறவேண்டும். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பமான காலப்பகுதியில் அடையாளங்காணப்பட்டதை விடவும் தற்போது இரண்டு அல்லது மூன்று மடங்கான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றார்கள்.
அதுமாத்திரமன்றி இந்த வைரஸ் பரவலுக்கு எதிராகப் போராடுவதற்கான முறையான அரசியல் கடப்பாடொன்று காணப்படாமையும் தற்போது நிலைமை மோசமடைவதற்குக் காரணமாகும்.
ஒருவருடகாலத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கத்தினாலும் அதிகாரிகளாலும் கொவிட் - 19 சமூகப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு செயற்திறனான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை சுகாதாரப்பிரிவினர் சரிவரப்புரிந்துகொள்ளாமையே கொவிட் - 19 வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் காணப்படும் மாபெரும் குறைபாடாகும். ஏப்ரல் - ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
பிரென்டிக்ஸ் கொத்தணி ஏற்பட்டதன் பின்னரும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மாறாக பரிசோதனைகளை முன்னெடுக்கும் விடயத்தைப் பொறுத்தவரையில், சுகாதாரப்பிரிவினர் முன்னர் இருந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே தற்போதும் சிந்திக்கின்றார்கள்.
பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் வைரஸ் பரவலை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
அதேபோன்று மறுபுறம் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகிய விடயங்களில் இராணுவத்தினர் கடந்த வருடம் மிகச்சிறந்த வகையில் செயற்பட்டிருந்தனர். ஆனால் அதன் பின்னர் முடக்கமும் அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டமை பாதகமானதாக அமைந்தது.
எனவே கொவிட் - 19 வைரஸ் கட்டுப்படுத்தல் பணிகளில் நாம் எந்தெந்த இடங்களில் தவறிழைக்கின்றோம்? என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலைக் கண்டறிவது மிகவும் அவசியமாகும்.
தொற்றாளர்களை அடையாளங்காண்பதற்கான பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைத்தமை பாரிய குறைபாடு என்பதுடன் இதன் காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கக்கூடும்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் ஜனாதிபதி சிறந்த கொள்கையைக் கொண்டிருப்பினும் அரசாங்கமும் அதிகாரிகளும் அதனை உரியவாறு செயற்படுத்துவதற்குத் தவறிவிடுகின்றனர்.
கேள்வி - நாட்டில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுவரும் நிலையிலும், இதுவரையில் மொத்த சனத்தொகையில் 10 - 20 சதவீதம் பேருக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. எனவே இக்காலப்பகுதியில் மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு எவற்றைச் செய்யவேண்டும்?
பதில் - வைரஸ் என்பது அது உருவான காலத்திலிருந்து பல்வேறு விதமாகத் திரிபடையக்கூடிய இயல்பைக் கொண்டிருக்கிறது.
அதன் மிகமோசமான திரிபுகள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மாத்திரமன்றி, தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மட்டுப்படுத்தப்படக்கூடும். இது இவ்வாறிருக்கையில் நாட்டில் குறித்தளவான டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருக்கின்றார்கள்.
இதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கும் இதனை இல்லாதொழிப்பதற்குமான ஒரேவழி, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதேயாகும். கொவிட் - 19 வைரஸ் தொற்று சீனாவில் முதன்முதலாக இனங்காணப்பட்டு, வெகுவாகப் பரவியபோதிலும் அதன் திரிபுகள் எவையும் அங்கு இனங்காணப்படவோ அல்லது பரவலடையவோ இல்லை.
ஆகவே பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பரவலைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் ஊடாகவே இதனை முழுமையாக இல்லாதொழிக்க முடியும்.
கேள்வி - கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டில் சில காலத்திற்கு அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் ஏதேனும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா?
பதில் - கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நாட்டை முடக்குவதை விடவும் பரிசோதனைகளை மேற்கொள்ளல், தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை அடையாளங்காணல், தனிமைப்படுத்தல் ஆகியவையே மிகவும் பிரதானமானவையாகும். நாட்டை முடக்கும் அதேவேளை மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் ஊடாக மாத்திரமே, அதன் முழுப்பயனையும் பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் இலங்கையில் பயணக்கப்பட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அதேவேளை, பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் அமுல்படுத்தப்படும் முடக்கம் மிகவும் வித்தியாசமானதாகும். அதாவது சிட்னி நகரம் முடக்கப்பட்டிருக்கும் காலத்திலும் அங்கிருப்பவர்கள் வெளியில் செல்லமுடியும்.
ஏனெனில் மூடப்பட்ட இடங்களுக்குள் வைரஸ் பரவலுக்கான சாத்தியப்பாடு உயர்வாகக் காணப்படுவதால், மக்கள் வெளியில் செல்வதை அங்குள்ள அதிகாரிகள் வரவேற்கின்றார்கள். எனினும் முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் யாரும் அலுவலகங்களுக்குச் செல்லமுடியாது.
வீடுகளிலிருந்தவாறே பணிபுரியவேண்டும். ஒன்றுகூடல்களை நடத்தவோ, பலர் குழுவாக இணையவோ முடியாது. அதேபோன்று பல நாடுகளில் எமது நாட்டில் முன்னெடுக்கப்படுவதையும் விட சுமார் பத்து மடங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அவை ஆக்கபூர்வமானதாக அமைகின்றதா என்பது குறித்துக் கவனம் செலுத்தவேண்டும்.
கேள்வி - கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமான வளங்கள் எமது நாட்டில் இருப்பதாகக் கருதுகின்றீர்களா?
பதில் - உண்மையில் இந்த மோசமான தொற்றுப்பரவலைக் கையாள்வதற்கு ஏற்றவாறான வளங்களும் இயலுமையும் எமது நாட்டின் சுகாதாரக்கட்டமைப்பிற்கு இருக்கின்றது.
குறிப்பாக தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை அடையாளங்காணும் செயற்பாடுகள் உயர் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இவ்விவகாரத்தில் முறையானதொரு செயற்திட்டம் இல்லாமையே பாரிய குறைபாடாகும். மலேரியா உள்ளிட்ட பல்வேறு சுகாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த எமது நாடு தற்போது பாரிய நெருக்கடியில இருப்பதற்குக் காரணம் அதுவேயாகும்.
கேள்வி - தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பலர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. தடுப்பூசியின் இயல்பு மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பில் முறையான வகையில் மக்களை அறிவூட்டும் பணிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கருதுகின்றீர்களா?
பதில் - உண்மையில் இவ்விடயத்தை அரசாங்கம் இன்னமும் சிறந்த முறையில் கையாளலாம். ஆனால் இதனைவிடவும் தற்போது காணப்படுகின்ற முக்கிய பிரச்சினை உலகளாவிய ரீதியில் தடுப்பூசிகளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பற்றாக்குறையாகும். தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டவர்கள் அடையக்கூடிய நன்மைகளைப் பார்த்து அவர்களும் தடுப்பூசி பெறுவதற்கு முன்வருவார்கள். ஆனால் தடுப்பூசிப் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாகும்.
அடுத்ததாக இவ்விடயத்தைக் கையாள்வதற்கு சரியான தலைமைத்துவமொன்று காணப்படாமையும் மிகமுக்கிய குறைபாடாகும். கொவிட் - 19 வைரஸ் கட்டுப்படுத்தலைப் பொறுத்தவரை, அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களிலும் யாரோ ஒருவர் இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று அவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளும் நபர் பொறுப்புக்கூறத்தக்கவராக இருப்பதென்பது ஜனநாயக நாடொன்றில் இன்றியமையாத விடயமாகும். எனவே பாராளுமன்றத்தின் ஊடாகவோ அல்லது இறுதியில் பிரதமரோ தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். எமது நாட்டில் அத்தகைய தலைமைத்துவக் குறைபாடு காணப்படுகின்றமையும் முக்கியமாகக் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM