( எம்.எப்.எம்.பஸீர்)

15 வயதான சிறுமி ஒருவர், இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில்,  குறித்த சிறுமியை பணம் கொடுத்து பெற்று பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், மாலை தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் மொஹம்மட் அஷ்மலி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்டார். 

இதன்போது அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் அன்றைய தினம் அவரை   அடையாள அணிவகுப்பு தொடர்பில் அவரை ஆஜர் செய்யவும் நீதிவான் உத்தரவிட்டார்.

இந் நிலையில் இந்த சிறுமி துஷ்பிரயோக விவகாரத்தில் இன்று மாலை வரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மிஹிந்தலை பிரதேச சபையின்  உப தலைவர், கப்பல் கெப்டன், பொலிஸ் உத்தியோகத்தர், பிக்கு ஒருவர், மாணிக்கக் கல் வர்த்தகர் உள்ளிட்ட சமூகத்தில் பல்வேறு மட்டங்களை சேர்ந்தோர் உள்ளடங்குகின்றனர்.

இதனைவிட சிறுமியின் தாய், முச்சக்கர வண்டி சாரதி, கார் சாரதி உள்ளிட்டவர்களும் அதில் உள்ளடங்குகின்றனர்.

இந் நிலையில் கைதுசெய்யப்பட்ட மாலைதீவு முன்னாள் நிதி  இராஜாங்க அமைச்சரும்,  சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய ஹோட்டல் அறை வழங்கிய பிரபல ஹோட்டல் ஒன்றின் காசாளரும் கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். 

அத்துடன் குறித்த சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்த, ஏற்கனவே கண்டறியப்பட்ட இணையத்தளத்துக்கு மேலதிகமாக மேலும் நான்கு இணையத் தளங்கள் தொடர்பிலும்  தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு, அவ்விணையத்தளங்களில் ஒன்றினை நடாத்திச் சென்ற மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதனைவிட முன்னதாக இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சி.ஐ.டி.யினர் விசாரிக்கும், சிறுமியை விற்பனைச் செய்த இணையத் தளத்தின் உரிமையாளர், நிதிக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரும் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போது விசாரணைகள் நிறைவடையாததால் அவ்விருவரும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலே பொலிஸ்  சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மாலை தீவு முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் நால்வரும் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.

இதில் மாலைதீவு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிறுமியை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டிலும், ஹோட்டல் ஒன்றின் காசாளர் சிறுமியை பலாத்காரம் செய்ய சிலருக்கு அறை வாடகைக்கு கொடுத்தமை தொடர்பிலும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களை நீதிவான் விளக்கமறியலில் வைக்க  உத்தரவிட்டார்.

 சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக விளம்பரம் செய்ததாக கூறப்படும் ஏனைய இணையத் தளங்களுடன் தொடர்புடைய இருவரும் இன்று மன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர்களை நீதிவான் 15 இலட்சம் ரூபா சரீரப் பிணையில்  செல்ல அனுமதித்தார்.

கடந்த ஜூன் 7 ஆம் திகதி கல்கிசை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் பிரகாரம் 15 வயதான சிறுமியை இணையத்தில் விற்பனை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்தே இந்த விவகார விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திடம் கையளிக்கப்பட்டது.  

இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரியின் நேரடி கட்டுப்பாட்டில், அவரது ஆலோசனைக்கு அமைய  சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரநாயக்க,  தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணைகளுக்கு சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவூடாக விசாரணைக்கு அவசியமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

 பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்தும் வட கொழும்பு போதனா வைத்தியசாலையின் 33 ஆவது சிகிச்சை அறையில் வைத்தியர்களின் கண்காணிப்பில்  உடலியல் மற்றும் மானசீக சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.