புத்தளம், கற்பிட்டி நுரைச்சோலை பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கியதாக சந்தேகிக்கப்படும் இராணுவத்தினர் 4 பேரையும் இம்மாதம் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிவான் நேற்று (04.07.2021) உத்தரவிட்டுள்ளார்.

சேருநுவர – கல்லாறு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ கெப்டன் உள்ளிட்ட நான்கு இராணுவத்தினரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி , நுரைச்சோலை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவரைக் கடத்திச் சென்று, அச்சுறுத்தல் விடுத்து தாக்கியமை தொடர்பில் சேருநுவர – கல்லாறு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவத்தினர் நால்வர் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணைகளில் தெரியந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், இராணுவத் தளபதியின் விஷேட பணிப்புரைக்கமைய இராணுவ பொலிஸாரால் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இராணுவ கெப்டன், இராணுவ கோப்ரல் மற்றும் லான்ஸ் கோப்ரல் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே இவர்கள் இவ்வாறு குறித்த நபரை கடத்தி அச்சுறுத்தல் விடுத்துள்ளமை, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், இராணுவ சட்டவிதிகளுக்கமைய குறித்த நால்வருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டு நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்களான நான்கு இராணுவ வீரர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) புத்தளம் மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபர்களை இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.