உலகிலேயே இந்தியாவில் தான் பெற்றோல், டீசல் விலை அதிகமாக விற்கப்படுகிறது என தே.மு.தி.க கட்சியின் பொருளாளரான திருமதி பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பெற்றோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தே.மு.தி.க சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களின் முன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

சென்னை ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தே.மு.தி.க பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார். இதன்போது திருமதி. பிரேமலதா விஜயகாந்த் மிதிவண்டியை ஓட்டிவந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

இந்நிலையில், பெற்றோல் டீசல் விலை உயர்வுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் தே.மு.தி.க பொருளாளர் திருமதி விஜயகாந்த் பேசியதாவது, 'பெற்றோல், டீசல் விலை உயர்வால் முச்சக்கரவண்டி மற்றும் டொக்ஸி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. விலைவாசியும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. பெற்றோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். உலகத்திலேயே இந்தியாவில் தான் பெற்றோல், டீசல் விலை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.' என்றார்.