(எம்.மனோசித்ரா)

வடக்கின் வசந்தம் , கிழக்கின் உதயம் , திவி நெகும உள்ளிட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வறுமையான மக்களைப் பற்றி சிந்தித்து செயற்பட்ட பஷில் ராஜபக்ஷ அமைச்சு பதவியேற்றால் , பொருளாதாரத்தை சிறந்த முறையில் மேம்படுத்துவார்.

அவரது வருகையை அனைவரும் விரும்புகின்றனர் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

Articles Tagged Under: நிமல் லன்சா | Virakesari.lk

இன்று திங்கட்கிழமை நீர்கொழும்பு கடற்கரையில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பஷில் ராஜபக்ஷ வந்ததன் பின்னர் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பார். அதில் எமக்கு எவ்வித சிக்கலும் கிடையாது.

அவர் சிறப்பாக சேவையாற்றக் கூடியவராவார். சேவை செய்து நிரூபித்து காட்டியவருமாவார். அவரே வடக்கின் வசந்தம் , கிழக்கின் உதயம், திவி நெகும உள்ளிட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வறுமையான மக்களைப் பற்றி சிந்தித்து செயற்பட்டவராவார்.

எனவே அவர் வந்ததன் பின்னர் பொருளாதாரத்தை சிறந்த முறையில் மேம்படுத்துவார். அவரது வருகையை அனைவரும் விரும்புகின்றனர் என்றார்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

தயாசிறி ஜயசேகரவுக்கு அவரது கருத்தை வெளியிடுவதற்கான ஜனநாயக உரிமை காணப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு வேடிக்கையானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுவதைப் போன்று அமைச்சு பதவி சிறந்ததல்ல என்றால் அதனை அவர் விரும்பவில்லை என்றால் சுதந்திர கட்சியைச் சேர்ந்த பிரிதொருவருக்கு அதனை ஒப்படைக்கலாம். விருப்பமின்றி அமைச்சு பதவியை வகிப்பது பாரிய பிரச்சினையாகும்.

இவை தொடர்பில் கூட்டணிக்குள் கருத்துக்களை தெரிவிக்காமல் வெளியில் சென்று கூறுவது பொறுத்தமல்ல. தயாசிறி ஜயசேகர அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சினையே எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை என்பதால் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டார்.