(ஆர்.ராம்)
- பட்ஜெட்டுக்கு முன்னர் ஸ்தாபிக்க திட்டம்
- அமைச்சரவையை விஸ்தரிப்பதே இலக்கு
- முஸ்லிம் தரப்புக்களை அரவணைக்க முடிவு
அடுத்த வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவர் களமிறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் சம்பந்தமாக ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய தரப்புக்களின் அரச ஆதரவு’ அணியுடன் பூர்வாங்கப்பேச்சுவார்த்தைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக அந்த அணியின் பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர்கள் இருவர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்களுக்கும், சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவிகளை வழங்குவதை இலக்காக வைத்தே தற்போதைய அமைச்சரவை விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொதுஜனபெரமுனவின் ஸ்தாபகரும், தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னதாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சிலருடன் தேசிய அரசாங்கம் தொடர்பான கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார்.
அதேபோன்று, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போது அமைச்சரவையை விஸ்தரிப்பதாக இருந்தால் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தினை பஷில் குறிப்பிட்டுக் கூறியிருக்கின்றார்.
மீண்டும் தேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான பூர்வாங்க கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வியூகத்திற்கு சொந்தக்காரரான பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க இருப்பதாக அவருக்கு நெருக்கமாக உள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஏற்கனவே கலந்தாலோசிக்கப்பட்டதன் பிரகாரம் சுதந்திரக்கட்சி, முஸ்லிம் தரப்புக்கள் உள்ளிட்டவற்றை அரவணைத்துக்கொண்டு மீண்டும் தேசிய அரசாங்கம் அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சில தயார்ப்படுத்தல்கள் ஆரம்பமாகியுள்ளன.
எனினும், கூறப்படுவதன் பிரகாரம், பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினைப் பெற்றதன் பின்னர் கொரோனாவினைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விரைந்து நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது
குறிப்பாக, சீனாவிடமிருந்து பெறப்படவுள்ள 13 மில்லின் தடுப்பூசிகளை பயன்படுத்தி நாட்டில் ஆகக்குறைந்தது அரைப்பங்கினருக்காகவது முழுமையான தடுப்பூசி வழங்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகின்றது.
அதற்காக கொரோனா தடுப்பூசிகளை அடுத்த மூன்று மாதங்களுக்குள் 30வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்துவதற்கு தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகளை செலுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வெற்றியடையும் போது ஒக்டோபர் மாதத்தினை அண்மித்து விடும் என்றும் அசாங்கத்தினால் கணக்கிடப்படுகின்றது.
எனவே அக்காலத்திலிருந்து வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலத்தில் தேசிய அரசாங்க விடயத்திற்குரிய பணிகளை முன்னெடுப்பதற்கும் உயர் மட்டம் தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதன் ஒரு அங்கமாகவே மேல்மாகாணம் முழுவதும் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்று பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் மீது எதிர்மறையான நிலைமைகள் காணப்படுகின்ற நிலையில் தேசிய அரசாங்க விடயத்தினை கையிலெடுத்தால் அது மேலும் அதிருப்திகளை தோற்றுவித்து விடும் என்பதால், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நிலைமைகள் வழமைக்கு திரும்பியதுடன் தமக்குச் சாதகமான நிலைமைகள் ஏற்படும் என்றும் அந்த சமயத்தினை பயன்படுத்தி தேசிய அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்தினை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், பொதுஜனபெரமுனவின் தற்போதைய பங்காளிகளான, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய, வாசுதேவ தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, திஸ்ஸ விதாரண தலைமையிலான லங்கா சமசமாஜக்கட்சி உள்ளிட்ட பத்து வரையான கட்சிகள் அதிருப்த்தியில் உள்ள நிலையில் அடுத்துவரும் காலத்தில் அத்தரப்புக்கள் எடுக்கும் தீர்மானமும் தேசிய அரசாங்கம் உருவாக்கப்படும் விடயத்தில் செல்வாக்குச் செலுத்தவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM