முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றையதினம் (04.07.2021)ஆனந்தபுரம் பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு செல்வதற்காக இரணைப்பாலை சந்திக்குச் சென்ற இளைஞர் ஒருவர் முகக்கவசம் அணிந்து செல்லாத  நிலையில், முகக்கசவம் அணிந்து செல்லுமாறு கூறி இராணுவ சிப்பாய் ஒருவர் குறித்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்நிலையில், அவ்விடத்தில் ஒன்று கூடிய மக்களால் இராணுவத்தினருடன் முரண்பாட்டு நிலை தோன்றியுள்ளது. முகக்கவசம் அணியாத காரணத்திற்காக  ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முடியுமா? என குறித்த இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.