ரொபட் அன்டனி 

 ''உங்கள் மகன் அல்லது கணவனை இழப்பது குறித்து சிந்தித்து பாருங்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றால் அவர்கள் எப்படி உணர்வார்கள் என்பது குறித்தும் சிந்தித்து பாருங்கள், அந்த துன்பியலான அனுபவத்தையே காணாமல்போனோரின் உறவுகள் அனுபவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை பொறுப்புள்ள அரசாங்கம் மதிப்பதுடன் அவர்களின் காயங்களை ஆற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்'' - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் 
யார் இந்த அலைனா டெப்லிட்ஸ் 
பிறப்பு - 1969 - இல்னொய்ஸ் மாநிலம் 

பட்டப்படிப்பு - வெளியுறவியல் (ஜோர்ஜ் டவுன் பல்கலை- 1991) 

முதுமாணி - பொதுநிர்வாகம் (இன்டியானா பல்கலை - 2018 )

1991 - வெளியுறவு சேவையில் இணைவு

2007 வரை - சிட்னி, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம் தூதரகங்களில் சேவை 

2007 - 2009 - இராஜாங்க திணைக்களத்தின் வெளியுறவு சேவை நிறுவனத்தின் முகாமைத்துவ பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர்  

2009 - 2011 - மத்திய, தெற்கு ஆசிய பிரிவுக்கு பொறுப்பான நிறைவேற்று பணிப்பாளர்   

2011-2012  -  ஆப்கானிஸ்தானின் காபுல் தூதரகத்தில் சேவை 

2015 -  2018  -  நேபாளத்துக்கான அமெரிக்க தூதுவர் 

2018 முதல்  -  இலங்கை தூதுவர்

''உங்கள் மகன் அல்லது கணவனை இழப்பது குறித்து சிந்தித்து பாருங்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றால் அவர்கள் எப்படி உணர்வார்கள்  என்பது குறித்தும் சிந்தித்து பாருங்கள்,  அந்த துன்பியலான அனுபவத்தையே காணாமல்போனோரின் உறவுகள் அனுபவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை பொறுப்புள்ள அரசாங்கம் மதிப்பதுடன் அவர்களின் காயங்களை ஆற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்'' 

வடக்கில் காணாமல்போனோரின் உறவினர்கள் சிலரை இவ்வருடத்தின் ஆரம்பத்தில் சந்தித்து கலந்துரையாடிய  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அப்போது வெளிப்படுத்திய உணர்வுபூர்வமான சொற்பிரயோகங்களே இவையாகும்.  

மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி முதல் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பதவியேற்ற   அலைனா டெப்லிட்ஸ் தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடு திரும்ப தயாராவதுடன் புதிய அமெரிக்க தூதுவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் வொஷிங்டனில் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. 

இலங்கையில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாத காலப்பகுதி என்பது அரசியல் ரீதியில் பாரிய நெருக்கடிகளை கொடுத்துக்கொண்டிருந்த  நேரமாகும். அப்போது பதவியிலிருந்த பிரதமர் ரணிலை நீக்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால எதிரணியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். இதனையடுத்து நாட்டில் பாரிய அரசியல் நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்னரே அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவராக அலைனா டெப்லிட்ஸ் பதவியேற்றார். இலங்கை வந்த அவர் சில நாட்கள் கடந்தே தனது நற்சான்று பத்திரத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார். அத்துடன் அரசியல் நெருக்கடி முடியும்வரை அமைதியாக வெளியே வராமல் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்தார் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்.  தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் நெருக்கடி ஓய்ந்ததன் பின்னரே வெளியேவர ஆரம்பித்ததுடன் நாட்டின் அரசியல் பொருளாதார மனித உரிமை ஜனநாயக, கலாசார சமூக விடயங்களில் அக்கறைகாட்டினார்.   

முக்கியமாக பெண்களை வலுவூட்டும் செயற்பாடு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைமை குறித்து அவதானித்தல், காணாமல் போனோரின்  உறவுகளின் நீதிக்காக குரல் கொடுத்தல் போன்ற விடயங்களில் பாரியளவில் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்  ஈடுபட்டு வந்தார்.  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பரகமான பொறுப்புக்கூறல் பொறிமுறையின் அடிப்படையில் நீதி நிலைநாட்டப்படவேண்டும். வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு திட்டங்கள் அவசியம்,  காணாமல்போனோருக்கு பதில் வேண்டும்,  தமிழ் மக்களின்  தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தீர்வு அவசியம்,  சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம் வலுப்படுத்தப்படுவது முக்கியம், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாத்தல் முக்கியம், அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார சமூகம் சார் அபிவிருத்தி மிக முக்கியம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து  அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கடந்த மூன்று வருடங்களாக அக்கறைகாட்டி வந்துள்ளார்.  

யார் அலைனா டெப்லிட்ஸ் ?  
1969 ஆம் ஆண்டு  அமெரிக்காவில் பிறந்த அலைனா டெப்லிட்ஸ் ஜோர்ஜ்டவுன் பல்கலையில் 1991 ஆம் ஆண்டு வெளியுறவியல்  தொடர்பான பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு இன்டியானா பல்கலையில் பொதுநிர்வாகம் குறித்த முதுமாணி பட்டத்தை பூர்த்தி செய்தார். 

1991 ஆம் ஆண்டு  22 ஆவது வயதில் அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தில் இணைந்துகொண்டார். 2007 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் சிட்னி, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம் உள்ளிட்ட  தூதரகங்களில் வெளியுறவு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளியுறவு சேவை நிறுவனத்தின் முகாமைத்துவ பயிற்சி நிலையத்தின் பணிப்பாளராக பணியாற்றினார் அலைனா டெப்லிட்ஸ்.  அத்துடன்  2009 இலிருந்து 2011 வரை மத்திய தெற்கு ஆசிய பிரிவுக்கு பொறுப்பாக நிறைவேற்று பணிப்பாளராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.  2011 முதல்  2012 வரை ஆப்கானிஸ்தானின் காபுல் தூதரகத்தில் பணியாற்றினார்.  அறிவு மேலாண்மை, தரவு பயன்பாடு, இடர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் நிபுணத்துவ அனுபவத்தை  அலைனா டெப்லிட்ஸ் கொண்டிருக்கின்றார். 

2012 முதல் 2015 வரை இராஜாங்க திணைக்களத்தில் முக்கிய பதவி நிலைகளில் பணியாற்றினார் அலைனா டெப்லிட்ஸ். தொடர்ந்து  2012-2015 முதல் இராஜாங்க திணைக்களத்தில் மேலாண்மை, கொள்கை, உரிமைகள் மற்றும் புத்தாக்க அலுவலகத்தின் உதவி செயலாளர் பதவியை வகித்தார். 

  

2015 முதல்  2018 ஆம் ஆண்டுவரை நேபாளத்துக்கான அமெரிக்க தூதுவராக சேவையாற்றினார். அதன்படியே 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி முதல் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவராக தனது சேவையை ஆரம்பித்தார். 

நெருக்கடி சூழலில் களப்பணி  
முக்கியமாக 70 வருடங்கள் பழமையான இலங்கை - அமெரிக்க இராஜதந்திர தொடர்புகளை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் பொறுப்பு சவால்  இவர் மீது  சுமத்தப்பட்டிருந்தது.  இக்காலப்பகுதியில் அலைனா டெப்லிட்ஸ் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின்  தேவைகள், அவர்களின் எதிர்பார்ப்புக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தியதுடன் இலங்கையின் பொருளாதார சமூக அபிவிருத்தி  மற்றும்  கலாசார விடயங்கள் குறித்தும் ஈடுபாட்டை கொண்டிருந்தார். 2019 ஆம் ஆண்டில் அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்திலும் முக்கிய பங்கு வகித்தவர்.  முக்கியமாக கடந்த மூன்றுவருட காலப்பகுதியில்  இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுநிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன.  அவ்வாறான கட்டங்களில் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதில் விடயங்களை சிறந்த முறையில் இராஜதந்திரமாக கையாண்டார்.  மிக விசேடமாக இலங்கையும் சீனாவும் நெருக்கமாக செயற்படுவதாக மேற்கு நாடுகளில் பேசப்பட்டபோதும் அது அமெரிக்காவின் இலங்கை மீதான பார்வையிலும் தாக்கம் செலுத்தியிருப்பதை தவிர்க்க முடியாது. எனினும் அலைனா டெப்லிட்ஸ் நிலைமைகளை முகாமைத்துவம் செய்து இருநாட்டு உறவில் சேதம் ஏற்படாமல் தனது வகிபாகத்தை நிலைநிறுத்தினார்.  

எம்.சி.சி.யின் போதான நிலைப்பாடு  
கடந்த நல்லாட்சி காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உலகையே உலுக்கியெடுத்தன. அதனையடுத்து அமெரிக்காவின் மில்லேனியம் சவால் கூட்டுத்தாபனத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை கொண்டுவரப்பட்டதுடன்  எம்.சி.சி. என்ற உடன்படிக்கையை கைச்சாத்திட இரண்டு நாடுகளும் தயாராகின. ஆனால் 2019 இன் பிற்பகுதியில் ஆட்சிக்கு வந்த  ஜனாதிபதி கோட்டபாய அரசாங்கம் அந்த எம்.சி.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. அந்த விடயத்தை சரியான முறையில் கையாண்ட அலைனா டெப்லிட்ஸ் அது தொடர்பான இறுதி தீர்மானத்தை இலங்கையே எடுக்கவேண்டும் என்றும் அதில்  அமெரிக்கா எந்தவகையிலும் அழுத்தம் பிரயோகிக்காது என்றும் தொடர்ச்சியாக கூறிவந்தார். 

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிரந்தர அரசியல் தீர்வு குறித்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். குறிப்பாக எட்டப்படும் தீர்வானது இலங்கை அரசாங்கமும்  தமிழர் தரப்பும் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளின் ஊடாக  எட்டப்படவேண்டும் என்பதிலும்  உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் விடயங்களை ஆராய விசேட செலயணி ஒன்று உருவாக்கப்பட்டபோது அது தொடர்பாக கேள்வியெழுப்பியதுடன் ஒரு  மாகாணத்துக்கு மட்டும் ஏன் இவ்வாறான  செயலணி என்ற விடயத்தை வெளிப்படுத்தினார்.    

அடிக்கடி கொழும்பில் பிரதான ஊடகங்களின்  ஊடகவியலாளர்களுடன் சந்திப்பை நடத்தி வந்ததுடன் அப்போது எந்தக்கேள்வியாக இருந்தாலும் இராஜதந்திர ரீதியில் பதிலளிப்பதுடன் பிராந்திய ரீதியான ஊடகவியலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடிவந்தார். குறிப்பாக  ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவர்  ஆராய்ந்து வந்தார். இலங்கையின் உணவு கலாசாரத்திலும் அதிக ஆர்வம் காட்டியவராக இருந்த  அலைனா டெப்லிட்ஸ் அடிக்கடி  இலங்கையின் தனித்துவ உணவுகளை சுவைத்ததுடன்  இலங்கையின் தேயிலையின் விசேடத்துவத்தையும் ருசிக்க தவறியதில்லை. 

வடக்கு கிழக்கு  நிலை குறித்த ஆர்வம்  
மேலும் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டுவதில் அதிக ஆர்வம் காட்டியதுடன்  அதற்கான திட்டங்களையும் வகுக்க நடவடிக்கை எடுத்திருந்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரம் குறித்து  அதிக அக்கறை செலுத்தியதுடன் அவர்களை சந்தித்து  ஆதரவையும் வெளிப்படுத்தியிருக்கின்றார். முக்கியமாக பெண்களை வலுவூட்டுவதற்கான செயற்பாடுகளில் அதிக ஆர்வம் காணப்பட்டது. இலங்கையின் சர்வமத சமய தலைவர்களையும் அடிக்கடி சந்தித்து நல்லிணக்க முயற்சியிலும் பங்கெடுத்திருந்தார் அலைனா டெப்லிட்ஸ். 

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளை அடிக்கடி சந்திக்கின்ற அமெரிக்கத் தூதுவர் அபிவிருத்தி தொடர்பான விடயங்களிலும் அதிகளவில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார். இருதரப்பு உடன்படிக்கைகளுக்கு களம் அமைத்தல், அது தொடர்பான விடயங்களுக்கு உதவுதல் போன்ற செயற்பாடுகளிலும் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இலங்கையின் சிவில் சமூக பிரதிநிதிகள்,  இளம் சந்ததியினர் உள்ளிட்டவர்களுடனான  சந்திப்புகளிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் பங்களிப்பை அமெரிக்க தூதுவர் வழங்கியிருக்கின்றார்.

மேலும் இலங்கையில் கொரோனா  வைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்ட பின்னர் பல்வேறு வழிகளில் இலங்கைக்கு அமெரிக்கா உதவிகளை வழங்குவதற்கு தனது பங்களிப்பை செய்தார்.    சுவாச கருவிகளைப் பெற்றுக் கொடுத்தல், மருத்துவ உபகரணங்களை வழங்குதல்  உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் இலங்கைக்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தரை்.   அமெரிக்காவின் உலக நாடுகளுக்கான தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தில் இலங்கையை  உள்ளடக்குவதிலும் அமெரிக்கத் தூதுவரின் பங்களிப்பு இன்றியமையாததாக காணப்பட்டது.   

இலங்கையின் பாரம்பரிய மரபுரிமைகளை கட்டிக்காப்பதிலும்  அதற்காக நிதி உதவிகளை கூட அமெரிக்காவின் சார்பில் பெற்றுக் கொடுத்திருந்தார்.   இலங்கையின் பிரசித்தி பெற்ற வணக்கஸ்தலங்களுக்கு  விஜயம் செய்வதிலும் தொடர்ச்சியாக அக்கறையை வெளிப்படுத்தியிருந்தார். திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று அங்கு வழிபாடுகளிலும் ஈடுபட்டதுடன் மடு தேவாலயத்துக்கு சென்று வழிபட்டு வந்தார்.  பௌத்த விகாரைகளுக்கு அடிக்கடி சென்று வந்தார். 

 சிறுவர் முன்னேற்றம் குறித்த அக்கறை  
மேலும் சிறுவர்களின் சுகாதார முக்கியத்துவம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தியதுடன் பாடசாலைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் பல சுகாதார பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுப்பதிலும் அமெரிக்க தூதுவர் அக்கறை காட்டி இருக்கின்றார்.   சிறுவர்களுக்கான உணவு பாதுகாப்பு விடயத்திலும் அவர்கள்  போஷாக்கான உணவை பெறவேண்டும் என்பதற்காகவும் குரல் கொடுத்தது மட்டுமன்றி  அதற்கான பல திட்டங்களையும் முன்னெடுக்க நடவடிக்கை எடுத்திருந்தார். 

அடிக்கடி யுத்தத்தினால் காணாமல் போனவர்களின் உறவினர்களை  சந்திப்பதில் அதிக ஆர்வம் காட்டிய அமெரிக்க தூதுவர் அவர்களை ஆற்றுப்படுத்துவதிலும் அவர்களுக்கான ஆறுதலை பெற்றுக் கொடுப்பதிலும் அதிகளவு பங்களிப்பு செலுத்தியிருந்தார்.  அவர்களின் பிரச்சினைகளை வெளி உலகுக்கு எடுத்துக் கூறுவதில் ஒரு சிறந்த மூலமாக அமெரிக்க தூதுவர் கடந்த காலங்களில் செயற்பட்டிருந்தார்.   முக்கியமாக சிறுவர்களை கல்வித்துறையில் முன்னேற்றுவதற்கான தொழில்நுட்ப உதவிகளை செய்வதில் முன்னின்றார்.  

இவ்வாறு கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு வழிகளிலும் இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார கலாசார விடயங்களிலும் அபிவிருத்தி துறையிலும் பாரியதொரு நாட்டத்துடனும் அவற்றில் அமெரிக்காவை பங்கெடுக்க வைப்பதிலும் சிறந்ததொரு செயற்பாட்டாளராகவும்  அமெரிக்கத் தூதுவர் இருந்திருக்கின்றார்.   இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும்  இடையிலான உறவு ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதெல்லாம் அவற்றை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து இரண்டு தரப்புக்கும் இடையிலான ஒரு சுமுகமான உறவைக் கொண்டு செல்வதில் வழங்கிய பங்களிப்பு மகத்தானதாக இருந்தது. 

 அதுமட்டுமின்றி எப்போதுமே ஜனநாயக விழுமியங்களை வலியுறுத்துவதிலும்   பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்கான வலியுறுத்தலிலும்  அவர் அதிகளவு நாட்டம்காட்டனார்.   இந்த விடயத்தில் அவர் அடிக்கடி   அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் முரண்படும் நிலையை எதிர் கொண்டிருந்தார்.  ஆனாலும் அவர் இந்த விடயத்தில் தயக்கத்தை காட்டியதில்லை.  முக்கியமாக பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக எப்போதுமே நின்று கருத்து வெளியிட்டிருக்கின்றார்.  ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்ட போது அது இலங்கைக்கு எதிரான பிரேரணை  அல்ல என்றும் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான  ஏற்பாடு  என்பதையும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கின்றார். அதில்  இருக்கின்ற பரிந்துரைகளை செயற்படுத்துவதன் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதுடன் இலங்கையும் சர்வதேச ரீதியில் நன்மதிப்பை பெற முடியும் என்ற விடயத்தையும்  அவர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கின்றார். 

 அந்தவகையில் மூன்று வருட காலம் ஒரு மிகப்பெரிய சவாலான நெருக்கடியான காலப்பகுதியில் அலைனா டெப்லிட்ஸ்   இலங்கையில் அமெரிக்க தூதுவராக பணியாற்றி விட்டு தற்போது தனது பதவியின் இறுதி காலத்தில் இருக்கின்றார். எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் பதவிக்காலம் முடிவடைந்து அவர் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.   அவர்  இலங்கை - அமெரிக்க உறவில் ஏற்படுத்திய அடைவு மட்டங்கள் சாதனைகள் எப்போதும்  அவரின் செயற்பாடுகளை பறைசாற்றும்.   இதன்பின்னர் இவர் மேலும் உயர் பொறுப்புகளை பெறுவதற்கான வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.  அந்தவகையில் அவரின் எதிர்கால நடவடிக்கைகள் எப்போதும் ஜனநாயகத்திற்காக குரல் கொடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் இருக்கும் வகையிலும் அமைய  வேண்டும் என்று நாமும் வாழ்த்துகிறோம்.