நுரைச்சோலை பகுதியில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் நான்கு இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ உடையை ஒத்த சீருடை அணிந்த நபர்கள் குறித்த பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொண்டு ஜூன் 30 அன்று இளந்தடி கடற்கரை பக்கத்தில் விட்டுவிட்டதாக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 38 வயதுடைய நபர் காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இராணுவத்துக்கு தகவல் வழங்கிய நிலையில், இராணுவம் விசாரணை நடத்தி சந்தேக நபர்கள் நால்வரையும் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதன் பின்னரே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேருநுவரவில் அமைந்துள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் கேப்டன் உட்பட நான்கு வீரர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.

தனிப்பட்ட தகராரு காரணமாகவே இவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நுரைச்சோலை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு , இராணுவ சட்டவிதிகளுக்கமைய இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத்தளபதி தெரிவித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.