(எம்.மனோசித்ரா)

கல்கிசை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரான மஹிந்தலை பிரதேசசபையின் உப தலைவரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சகார காரியவசம் கடிதமொன்றின் மூலம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் 'உங்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பாரதூரமானதாகும். எனவே உடனடியாக அமுலாகும் வகையில் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இனி எந்தவொரு காரணத்திற்காகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக நீங்கள் செயற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.