போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறிய பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

By T Yuwaraj

03 Jul, 2021 | 05:41 AM
image

(செ.தேன்மொழி)

போக்குவரத்து கட்டுப்பாட்டுகளுக்கு புறம்பாக கொழும்பிலிருந்து மட்டகளப்பு நோக்கிச் சென்ற மூன்று பஸ்கள் பொலிஸாரால் இனங்காணப்பட்டு , 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் , வெள்ளிக்கிழமை கொழும்பிலிருந்து மட்டகளப்பு நோக்கி சென்ற மூன்று சொகுசு பஸ்களை கரடியனாறு பொலிஸார் இனங்கண்டுள்ளதோடு , குறித்த பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எழுமாறான அன்ரிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போதே , இவ்வாறு மூவருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த மூன்று தொற்றாளர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு , அவர்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணிய 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மாகாணத்தை கடக்க முற்பட்ட இந்த நபர்களுக்கு எதிராகவும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராகவும் எதிர்வரும் புதன்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதன்போது குறித்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர்ப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right