(எம்.எப்.எம்.பஸீர்)

தீ பரவலுக்கு உள்ளாகி மூழ்கிய  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தின் சந்தேக நபராக கைது செய்யப்பட்ட அக்கப்பலின் உள்நாட்டு பிரதிநிதியான சீ கன்சோடியம் தனியார் நிறுவனத்தின் உதவி பொது முகாமையாளர் சஞ்ஜீவ லங்காபிரிய சமரநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இதற்கான உத்தரவை நேற்று  வியாழக்கிழமை வழங்கியது.

குறித்த நிறுவன உதவி  பொது முகாமையாளரான சஞ்ஜீவ சமரநாயக்க, சி.ஐ.டி.யில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டு, நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன் ஆஜர்ச செய்யப்பட்டார்.

இதன்போது முறைப்பாட்டாளர் சி.ஐ.டி.யினர்  சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன், குறித்த சந்தேக நபரை 5 ஆம் சந்தேக நபராக பெயரிடுமாறு மன்றைக் கோரினார்.

அவரை சந்தேக நபராக பெயரிட போதுமான விடயங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது சந்தேக நபராக பெயரிடப்பட்ட சஞ்ஜீவ சமரநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட பிணை கோரினார்.

இந்நிலையில் சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில்  செல்ல அனுமதித்த நீதிபதி, அவரது வெளிநாட்டு பயணத்தையும் தடை செய்தார்.

இவ்வழக்கில் ஏற்கனவே சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள கப்பல் கெப்டன் ரஷ்ய பிரஜை டியூட் காலோ விட்டெலி,  கப்பலின் உள்நாட்டு பிரதி நிதி நிறுவனமான சீ கன்சோர்ட்டியம் தனியார் நிறுவன தலைவர் அர்ஜுன ஹெட்டி ஆரச்சி,  பணிப்பாளர்களான அமிந்த ஹெட்டி ஆரச்சி, பண்டுல வீரசேகர ஆகியோர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வழக்கானது விசாரணைக்கு வந்த போது அவர்களும் மன்றில் ஆஜராகினர்.

 இது குறித்த வழக்கு விசாரணை ஜூலை 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.