சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'அண்ணாத்த' தீபாவளி திருநாளன்று வெளியாகும் என படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

'தல' அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தை இயக்கிய இயக்குனர் சிவா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'அண்ணாத்த'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் மூத்த நடிகைகள் மீனா, குஷ்பூ, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு இயக்குனர் சிவாவின் ஆஸ்தான இசையமைப்பாளரான டி இமான் இசையமைக்கிறார்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. அண்மையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்புசி செலுத்திக்கொண்டு படப்பிடிப்பில்  பங்குபற்றினார். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமிருப்பதாகவும், அந்தக்காட்சி அமெரிக்காவில் படமாக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் தீபாவளி திருநாளான நவம்பர் 4ஆம் திகதியன்று வெளியாகும் என்றும், அத்துடன் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டிருந்த படமாளிகைகள் விரைவில் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டிருப்பதால்,' அண்ணாத்த' திரைப்படம் பட மாளிகைகளில் தீபாவளி திருநாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.