(நா.தனுஜா)
சீன கம்யூனிஸ்ட் கட்சி தோற்றம் பெற்றதன் பின்னரான கடந்த 100 வருடகாலத்தில் சுதந்திரத்திற்காகவும் இறையாண்மைக்காகவும் போராடிய தருணங்களிலும் ஒற்றுமையையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட சந்தர்ப்பங்களிலும் சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் பக்கபலமாகவும் செயற்பட்டு வந்துள்ளன. தற்போதும் பல்வேறு சவால்கள் காணப்படும் நிலையில், அதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தப்படும் என்று சீனத்தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சீன கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 1921 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி உதயமானது. ஆரம்பத்தில் சுமார் 50 உறுப்பினர்களைக் கொண்டிருந்த அந்தக் கட்சி கடந்த நூறு ஆண்டுகளில் சுமார் 91 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அதுமாத்திரமன்றி உலகின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் பெருமளவில் பங்களிப்புச்செய்யக்கூடிய நாடாக சீனா சிறந்த முறையில் வழிநடத்திச் செல்கின்றது.  

கடந்த 100 வருடகாலத்தில் சுதந்திரத்திற்காகவும் இறையாண்மைக்காகவும் போராடிய தருணங்களிலும் ஒற்றுமையையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட சந்தர்ப்பங்களிலும் சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் பக்கபலமாகவும் துணைநின்று செயற்பட்டு வந்துள்ளன. தற்போது பல்வேறு சவால்கள் காணப்பட்டாலும், அதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையே மேலும் வலுப்படுத்தப்படும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைத்திருப்பும் சீன - இலங்கை நட்புறவும் நெடுங்காலத்திற்குத் தொடரவேண்டும் என்று சீனத்தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வருடப்பூர்த்தியை முன்னிட்டு இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் ஸென்ஹொங் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 'பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த சீனாவில் 1921 ஆம் ஆண்டு ஜுலை முதலாம் திகதி சீன கம்யூனிஸ்ட் கட்சி தோற்றம்பெற்றது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியொன்றின் உருவாக்கமானது மிகவும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது. நூறு வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டு கடந்த 72 ஆண்டுகளாக சீனாவை ஆட்சிசெய்துவரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியானது ஆரம்பத்தில் 50 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டிருந்து, இப்போது 91 மில்லியன் உறுப்பினர்களுடன் விரிவடைந்திருக்கிறது' என்று சீனத்தூதுவர் விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தின்  கீழ் வறுமையிலிருந்தும் பின்னடைவிலிருந்தும் சீனா முழுமையாக மீட்சி பெற்றிருக்கிறது. அதுமாத்திரமன்றி வலுவான தேசியத்துவத்துடன் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக்கொண்ட நாடாகவும் எழுச்சியடைந்திருக்கிறது என்றும் குய் ஸென்ஹொங் தெரிவித்துள்ளார். கடந்த 100 வருடகாலத்தில் சீன கம்யூனிஸட் கட்சியானது இலங்கை உள்ளிட்ட மேலும் பலநாடுகளில் உள்ள அரசியல்கட்சிகளுடன் தொடர்புகளைப் பேணிவந்திருக்கின்றது. அதேவேளை சமாதானத்தையும் அபிவிருத்தியையும் விரும்பும் சர்வதேச நாடுகளுக்கு சீன கம்யூனிஸட் கட்சி சிறந்த வழிகாட்டலை வழங்கியிருக்கின்றது. உலகளாவிய நிலைமைகள் எவ்வாறு மாற்றமடைந்தாலும், சீனாவானது எப்போதும் வரலாற்றையும் மக்களையும் முன்னிறுத்தி சரியான பக்கத்திலேயே நின்றிருக்கிறது. பூகோள அமைதியை நிலைநாட்டுகின்ற, உலகளாவிய அபிவிருத்திக்குப் பங்களிப்புச்செய்கின்ற நாடாகவே சீனா இருந்திருக்கிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காண்மையை மேலும் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வருடப்பூர்த்தியை முன்னிட்டு 132 பக்கங்களைக்கொண்ட விசேட பத்திரிகை இணைப்பொன்று சீனத்தூதரகத்தினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.