மோடியா.. யோகியா.. பாஜகவின் உட்பூசல்?

Published By: J.G.Stephan

01 Jul, 2021 | 06:23 PM
image

வேல் தர்மா

2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் தலைமை அமைச்சராக மோடி தொடர்வாரா அல்லது உத்தரப் பிரதேச (உ.பி) மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மோடியை ஓரம் கட்டி விடுவாரா என்பதை 2022-ம் ஆண்டின் முற்பகுதியில் நடக்கவிருக்கும் உத்திரப் பிரதேச சட்ட மன்றத் தேர்தல் முடிவு செய்யலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. கொவிட்-19 தொற்று நோயை தலைமை அமைச்சராக மோடியும் மாநில முதலமைச்சராக யோகியும் மோசமாக கையாண்டு கொண்டிருப்பவர்கள். புது டில்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாதை இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது என்று சொல்லலாம். 

முக்கியத்துவம் வாய்ந்த உபி
2014-ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான (லோக் சபா) தேர்தலில் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் உத்தரப் பிரதேசத்தின் வர்ணாசி தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பின்னர் வதோதரா தொகுதியில் பெற்ற வெற்றியை தலைமுழுகி விட்டு உத்தரப் பிரதேச மகனாக தன்னை நிலை நிறுத்தினார். 2019இல் நடந்த தேர்தலிலும் வர்ணாசியில் போடியிட்டு வெற்றி பெற்றார். கஷ்மீரைச் சேர்ந்த நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட உத்தரப் பிரதேசத்தில் இருந்தே அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். ஜவகர் லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் உத்தரப் பிரதேசத்தில் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்று தலைமை அமைச்சர்களாகினார்கள். உ.பி எண்பது உறுப்பினர்களை இந்தியாவின் மக்களவைக்கு தெரிவு செய்கின்றது. 

மோடியும் யோகியும்
மோடி திருமணமாகி துறவறம் பூண்டவர். யோகி திருமணமாகாமல் துறவறம் பூண்டு காவியுடை தரித்தவர். மோடி சிறிய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்தவர். யோகி இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர். மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். யோகி உயர் சாதி பிராமணர். இந்தியாவின் வரலாற்றின் பெரும்பகுதியில் தம்மை பிராமணராகச் சொல்பவர்களே தலைமை அமைச்சர்களாக இருந்துள்ளனர். உ.பியின் முதல்வராக யோகி ஆதித்யநாத் தெரிவான பின்னர் அவர் புது டில்லியின் தலைமை அமைச்சர் பதவிக்கு குறிவைக்கலாம் என ஐயம் கொச்ண்ட மோடி தன்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான அரவிந்த் குமார் ஷர்மா என்பவரை குஜராத்தில் இருந்து உ.பியிற்கு கொண்டு போய் அவரை உ.பி சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராக நியமித்தார். அத்துடன் உ.பி மாநில பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) துணைத்தலைவராகவும் ஆக்கினார் மோடி. அத்துடன் நிற்காமல் அரவிந்த் குமார் ஷர்மாவை உ.பியின் துணை முதல்வராகவும் ஆக்க முயன்றார். அதற்கு யோகி ஆதித்யநாத் எதிர்ப்பு காட்டி மறுத்த போது மோடி – யோகி மோதல் உருவானது. 

சாதிப் போட்டி நிறைந்த உத்தரப் பிரதேசம்
தமிழ்நாட்டு சட்ட மன்றத் தேர்தலில் இலவசங்கள் முக்கியத்துவம் பெறுவது போல உ.பி சட்ட மன்றத் தேர்தலில் சாதி முக்கியத்துவம் பெறுகின்றது. தேசியக் கட்சிகள் சாதியை அடிப்படையாக வைத்தே தெரிவு செய்கின்றன. சாதியை முன்வைத்தே மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்றோர் தமது கட்சியை நடத்தி வெற்றி பெறுகின்றனர். பத்து விழுக்காடு பிராமணர்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 2017-ம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி பெரு வெற்றி ஈட்டியதற்கு மோடி-அமித் ஷா வகுத்த உபாயங்களே காரணமாகும். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதியை அகிலேஷ் யாதவின் சமாஜ் வாதக் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தடுத்தார் அமித் ஷா. பார்ப்பனர்களின் வாக்குகள் காங்கிரசுக் கட்சிக்கு போகாமல் இருக்கவே பார்ப்பனரான யோகி ஆதித்யநாத் 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 

2022 சட்ட மன்றத் தேர்தல் வேறு பிரச்சனைகளைக் கொண்டது
2022இன் முற்பகுதியில் நடக்க விருக்கும் உ.பி சட்ட மன்றத் தேர்தலில் சாதிப் போட்டி மட்டும் பிரச்சனையாக இருக்கப் போவதில்லை. யோகி ஆதித்யநாத் கொவிட்-19 தொற்று நோயைக் கையாண்ட விதம் உலகெங்கும் கடுமையாக விமர்சிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது. புனித நதியான கங்கையில் தொற்று நோயால் இறந்தவர்களின் உடலங்கள் வீசப்பட்டமை உலக அரங்கில் இந்தியாவின் பிம்பத்தை பெரிதும் பாதித்தது. அத்துடன் உ.பியில் ஆளும் பாஜக கட்சிக்குள் பெரிய உட் பூசல்களையும் உருவாக்கியுள்ளது. இதனால் 2021 மே மாதம் நடந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 2022இல் நடக்கவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானால் அவரது தலைமை அமைச்சர் பதவி மீதான விருப்பம் மேலும் தீவிரமடையும். 

2024 தலைமை அமைச்சர் வேட்பாளர் யார்?
நரேந்திர மோடியும் நாடளவிய அடிப்படையில் வெறுப்புக்கு உரியவராக மாறியுள்ளார். ஆனாலும் காங்கிரசுக் கட்சியின் தலைமை மீதான நம்பிக்கையின்மை மோடியை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 2021 ஜூன் மாத இறுதியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி மோடி மீதான மக்களின் விருப்பம் 22விழுக்காடு குறைந்தாலும் மோடியை இப்போதும் 63விழுக்காடு இந்தியர்கள் விரும்புகின்றார்கள். மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் மோடி தீவிர பரப்புரை செய்தும் அங்கு பாஜக தோல்வியடைந்ததுடன் அங்கு வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரசுக் கட்சியின் தலைவியால் மானபங்கப்படுத்தப்பட்டார். தேசியவாத காங்கிரசுக் கட்சியின் தலைவர் சரத் பவார் பாஜகவிற்கும் சோனியாவின் காங்கிரசுக் கட்சிக்கும் மாற்றாக ஒரு மூன்றாம் அணியை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது வீட்டில் நடந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் முன்னாள் நீதியரசர்கள் போன்ற பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். ஆனால் சிவசேனா, சமாஜ்வாத கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, திமுக போன்ற முக்கிய பிராந்தியக் கட்சிகள் பங்கு பெறவில்லை. சோனியாவின் காங்கிரசையும் இணைத்து கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்து அங்கு பரவலாக முன்வைக்கப்பட்டது. அதனால் 2024 தேர்தலில் பாஜக பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டும். யோகி ஆதித்யநாத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராலும் மாட்டிறைச்சி உண்பவர்களாலும் கடுமையாக வெறுக்கப்படுபவர். அவர் இந்தியாவின் தலைமை அமைச்சராவது உலகில் இந்தியாவின் விம்பத்தை பெரிதும் பாதுக்கும். 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்தியப் நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் மோடியே தலைமை அமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புண்டு. மோடியின் செல்வாக்கு மேலும் மோசமடைந்தால் மாற்று வேட்பாளராக நிதின் கட்காரியை நிறுத்தப்படலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடிசார் சமூகமும் அரசியல் பிரதிநிதித்துவமும்

2024-06-24 18:09:00
news-image

மக்காவில் அனர்த்த மரணங்கள் : பொறுப்புக்கூற...

2024-06-24 18:04:40
news-image

பலஸ்தீனர்களுக்கான நியாயத்தை அமெரிக்கா ஒருபோதும் வழங்காது

2024-06-24 18:01:59
news-image

உக்ரேன் சமாதான மாநாடு : தொலைத்த...

2024-06-24 17:58:03
news-image

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை வருடமொன்றுக்கு நீடித்தல் அரசியலமைப்பை...

2024-06-24 17:54:14
news-image

அணுமின் நிலைய சவால்கள்

2024-06-24 17:47:23
news-image

மது பாவனைக்கு அரச அங்கீகாரம்

2024-06-24 17:40:35
news-image

வவுனியா வடக்கில் மாற்றப்படும் குடிப்பரம்பல் -...

2024-06-24 17:30:37
news-image

ஜெனிவாவுக்கு போக்கு காட்டும் அரசு

2024-06-24 17:19:53
news-image

அமெரிக்காவின் வியூகம் என்ன?

2024-06-24 17:14:02
news-image

தமிழ் அரசியலை சரியான வழித்தடத்தில் ஏற்றும்...

2024-06-24 17:07:08
news-image

போராட்டத்தால் முடங்கும் அரசாங்கப் பல்கலைகள்

2024-06-24 16:45:51