(செ.தேன்மொழி)
அநுராதபுரம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

அநுராதபுரம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்டதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அநுராதபுரம் - மாவிலச்சிய , சூரியதமன பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு , நொச்சியாகம மற்றும் மாவிலச்சிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,  நீர்கொழும்பு - குரண பகுதியில் புதையல் அகழ்வில்  ஈடுபட்டதாக மேலும்  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஜா-எல, பெலிஅத்த, அம்பாந்தோட்டை மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்