பொகவந்தலாவையில் கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டத் தொழிலாளர்களால், நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டுள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றும் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

குறித்த தோட்ட மக்கள், சில கோரிக்கைகளை முன்வைத்தே, இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

மேலும், நாளாந்த சம்பளமாக, ஆயிரம் ரூபாவை பெற வேண்டுமானால், வழமையாக பறிக்கும் கொழுந்தின் நிறையை விடவும் மேலதிகமாக 5 கிலோ நிறை கொழுந்தை பறிக்க தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோருக்கு தாங்கள் கடிதம் அனுப்பியுள்ள போதிலும், இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், நாளொன்றுக்கு 13 கிலோ கொழுந்தை பறிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த தரப்பினர், தோட்ட நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி உரிய தீர்வைப் பெற்றுத்தரும் வரையில், தங்களின் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த தொட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து, குறித்த பிரதேசத்தை தனிமைப்படுத்துவதற்கு பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

எனினும், குறித்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் தெரியவந்துள்ளது.