செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் நோக்கில், கைவிடப்பட்ட பஸ்களை கடலில் இறக்கும் திட்டம் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வலைத்தளங்களில் பஸ்கள் இறக்கப்படும் காட்சிகள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
இலங்கை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட கடல்வளம் நிறைந்த தீவு என்பதால் இங்கு மீன் பிடி என்பது இராவணன் காலம் தொட்டே இருந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆயினும் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்த காலத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் பாரிய அளெகரியங்களை சந்தித்தனர்.
யுத்தத்திற்கு பின்னரும் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தீரவில்லை. குறிப்பாக வடக்கு கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதாகவும் அவர்கள் கடல் உயிரினங்களின் இருப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தும் மோட்டார் படகுகளை பயன்படுத்தி கடல் வளங்களை அழித்துவிடுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது.
இது ஒரு புறம் இருக்க அண்மையில் இடம்பெற்ற கப்பல் விபத்துகள் நமது கடல் வளத்தை அதிகளவில் பாதித்துள்ளது. சிறிய மீன்கள் தொட்டு திமிங்கலம், ஆமை என பல கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதிங்கியதை காணமுடிந்தது. இவை கடல்வாழ் உயிரினங்களின் இருப்புக்கே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பிரகாரம், வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் குறித்த செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கைவிடப்பட்ட 40 பஸ்களை கடலில் இறக்கும் நோக்கில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சயுரு கப்பலின் மூலம் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து பஸ்கள் ஏற்றிச்செல்லப்பட்டு கடலில் இறக்கப்பட்டன.
கைவிடப்பட்ட பஸ்கள் மற்றும் ரயில் பெட்டிகளை கடலில் இறக்கி விடுவதன் மூலம் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் நீரடிப் பாறைகளுக்கு நிகரான சூழலை செயற்கையான முறையில் உருவாக்கும் நோக்கிலேயே கடற்றொழில் அமைச்சினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதாவது, கடலுயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களைஅடையாளங்கண்டு குறித்த பிரதேசத்தில், பாவனைக்கு பயனற்று கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களை இறக்கி விடுவதன் மூலம் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக பழைய ரயில் பெட்டிகளையும் கடலில் இறக்கப்போவதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழ்நாட்டு மீனவர்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினர். அத்தோடு, தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடும்போது மீன் பிடி வலைகள் இந்த பஸ்களில் சிக்கி கிழிந்து மீனவர்கள் வலைகளை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். இதனால் படகு ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். காலப்போக்கில் மீன் பிடி அழியும் சூழல் ஏற்படும்.
இலங்கை மீன் வளத்துறை இந்திய மீனவர்களின் மீன் பிடி தொழிலை அழிக்கும் நோக்கில் இரகசியமாக திட்டமிட்டு இலங்கை கடற்படையின் உதவியுடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இலங்கை அரசு கைவிடப்பட்ட பஸ்களை பழைய இரும்பு விலைக்கு விற்று அதில் வரும் பணத்தில் செயற்கை பவளப்பாறைகள் அமைத்து கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கையை உயர்த்தலாம்.
இலங்கை அரசு அதை செய்யாமல் உலக நாடுகளில் எங்கும் செய்யாத ஒரு செயலை செய்து வருகிறது. இலங்கை அரசின் இந்த அறிவிப்பை திரும்பபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “இந்த திட்டத்ததால் கடல் வளம் அழிய சாத்தியம் இல்லை. காரணம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கொன்கிரீட் தூண்கள் அமைத்து நடுக்கடலில் செயற்கை பவளப்பாறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கடலில் இறக்கும் இந்த பழைய பஸ்கள் கடல் சீற்றம் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக இந்திய எல்லைக்குள் போகாமல் இருக்க பஸ்ஸின் நான்கு புறமும் கொன்கிரீட் போட்டு உறுதியாக கடலில் நிறுத்தப்பட்டு வருகின்றன. இலங்கை மீன்வளத்துறை இந்த திட்டத்தை இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மட்டும்மே செய்து வருகிறது.
இலங்கை மீன் வளத்துறையால் கடலில் போடப்படும் இந்த பஸ்கள் செயற்கை பவளப்பாறையாக மாறி அதன் மூலம் கிடைக்கும் மீன்கள் நிச்சயம் இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய கடற்பரப்பிற்குள் செல்லும் என்பதால் இந்திய மீனவர்களுக்கும் நல்ல பயன் கிடைக்கும்.
இந்த திட்டத்தால் இந்திய மீனவர்களின் மீன்பிடி தொழில் நிச்சயம் பாதிக்கப்படாது. இலங்கை கடற்பரப்பில் உருவாகும் மீன்களுக்கு இந்திய கடல் இலங்கை கடல் என பிரித்துப் பார்க்க தெரியாது எனவே மீன்கள் இந்திய கடலுக்குள் செல்ல அதிக வாய்ப்புண்டு. தமிழ்நாட்டுக் கடற்பரப்பில் உள்ள வளங்களை தமிழ்நாடு மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறை மற்றும் அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடித்து அழித்துள்ளனர்” என்கிறார் .
உண்மையில், கடலில் குப்பைகள் சேர்வதை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டிருக்கும் நிலையில் கடல் வளங்களை பாதுகாப்பதற்கு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது வழமையாகும்.
இதற்கு முன்னரும் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றிய கப்பல்கள் மற்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய குண்டு துளைக்காத வாகனங்கள் என்பன நீர்கொழும்பு கடற்பரப்பில் நீரிழ் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
இவற்றை திருத்துவதற்கு அதிக செலவுகள் ஏற்படும் என்பதாலும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதும் வழமையானதாகும். ஆழ்கடலில் கப்பல் மற்றும் வாகனங்கள் மூழ்கடிக்கப்பட்ட பகுதியில் அவை, சிப்பிகள் உட்பட கடல் வாழ் உயிரினங்களை ஈர்க்கும் செயற்பாடுகளுக்கு வழியேற்படுத்தும். அதேவேளை அந்தப் பகுதிகைளை எதிர்காலத்தில் ஒரு சுற்றுலாப் பயணத்துக்கான இடமாக மாற்றுவதற்கும் வழியேற்படும்.
ஆயினும், கைவிடப்பட்ட பஸ்களை கடலில் இறக்குவதால் மீனவர்களின் படுப்பு வலை தொழில் முழுமையாக பாதிக்கப்படுவதுடன் இயற்கை சீற்றம் ஏற்படும் காலத்தில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீன்பிடி படகுகள் கவிழ்ந்தால் படகில் உள்ள மீனவர்கள் உயிரிழக்க நேரிடும்.
கைவிடப்பட்ட பஸ்களின் கூடுகள் எடை குறைந்தவை என்பதால் கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப இடத்திற்கு இடம் நகரும். இதனால் மீனவர்களுக்கு ஏற்படும் நன்மையை விட தீமையே அதிகம் என சிலர் இத்திட்டத்தினை விமர்சிக்கின்றனர்.
மேலும், பஸ் கூடுகள் இறக்கும் இடத்திற்கு அருகில் நண்டுவலை, சுறாவலை, திருக்கை வலை, கும்ளாவலை போன்றவற்றை பயன்படுத்த முடியாது என கூறப்படுகின்றது. ஆயினும், பல நாடுகளில் கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க கைவிடப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இலங்கை கடற்பரப்பின் ஆழத்துக்கும் பசுப்பிக் சமுத்திரத்தின் ஆழத்திற்கும் வித்தியாசம் உள்ளது. மிகக் குறைந்த ஆழம் உள்ள எமது நாட்டின் கடற்பரப்பில் வாகனங்கள் இறக்கப்படுவது சுனாமி போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மீள நம்மிடமே கழிவாக வந்து சேர கூடிய வாய்ப்புள்ளது.
எது எப்படியோ இறைவனின் இந்த பூமி நமக்கானது மட்டும் அல்ல. ஆனால் மனிதன் தனக்கானது என்று மட்டும் நினைத்து செய்யும் விடயங்கள் அவனுக்கே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றது.
கடல் என்பது கோடிக்கான உயிர்களுக்கு சொந்தமானது. நாம் மீன்பிடித்து உண்பதற்காக மட்டும் படைக்கப்பட்டது அல்ல. பல உயிர்களோடு தொடர்புபட்டது. ஏற்கனவே நாம் கடல், காடு என மற்ற உயிரினங்கள் வாழும் இடங்களை ஆக்கிரமித்து பல துன்பங்களை செய்துவிட்டோம். அதற்கான பாவத்தையும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.
இனி நாம் எது செய்தாலும் இந்த இயற்கையை பாதிக்காததாக இருக்க வேண்டும். கடலுக்குள் வாகனங்கள் இறக்கப்படும் திட்டமும் அவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
கடலில் நாம் வீசிய குப்பைகளை எல்லாம் நமக்கு கடல் திருப்பி கொடுத்த சுனாமி என்ற பேரழிவை நாம் மறந்துவிடகூடாது. பவளபாறைகள் அழிவுகளுக்கு மனித செயற்பாடுகளே காரணம். இன்று செயற்கையே தேடுகின்றோம். இனியாவது கடலையும் நம்மை போல நேசித்து கடல் வாழ் உயிரினங்களை பாதுகாத்திடுவோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM