கொவிட்-19 தொற்றின் மாறுபாட்டு நிலைக் காரணமாக இலங்கை மற்றும் பிற ஐந்து நாடுகளுக்கான நேரடி விமான சேவையை நிறுத்துவதாக துருக்கி அரசாங்கம் செவ்வாயன்று அறிவித்துள்ளது.

அதன்படி பங்களாதேஷ், பிரேசில், தென்னாபிரிக்கா, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை ஜூலை முதலாம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைப்பதாக துருக்கி உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

கொவிட்-19 வைரஸின் புதிய மாறுபாடுகள் காரணமாக சில நாடுகளில் தொற்றுநோயின் போக்கு அண்மையில் அதிகரித்திருப்பதாகவும் அமைச்சகம் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இந்த நாடுகளில் இருந்து நிலம், காற்று, கடல் அல்லது ரயில்வே உள்ளிட்ட எந்தவொரு நேரடி உள்ளீடுகளுக்கும் துருக்கி தனது எல்லைகளை மூட முடிவு செய்தது.

கடந்த 14 நாட்களுக்குள் அந்த நாடுகளில் ஒன்றில் இருந்தபின் மற்றொரு நாட்டிலிருந்து துருக்கிக்கு வரும் பயணிகள் கடந்த 72 மணி நேரத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளில் எதிர்மறை கொவிட்-19 சோதனை முடிவை கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.