துறைமுகம் மற்றும் சுங்கப்பிரிவினர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உரிய தீர்வு – நாமல் உறுதி

By T. Saranya

01 Jul, 2021 | 09:00 AM
image

(நா.தனுஜா)

பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றத்திற்கான கேந்திரநிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் பயணத்தில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளின்போது துறைமுகம் மற்றும் சுங்கப்பிரிவினர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உரிய தீர்வைப்பெற்றுக்கொடுத்து, அச்சேவையை செயற்திறனான வகையில் முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் உரிய தரப்பினரால் ஆராயப்பட்டுள்ளது.

கொள்கலன்களைக் கொண்டுசெல்லும் போது சம்பந்தப்பட்ட தரப்பினர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலான கலந்துரையாடல்துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளின்போது கொள்கலன்களைப் பெற்றுக்கொள்வதிலும் அவற்றை மீளவழங்குவதிலும் காணப்படும் சிக்கல்கள், கொள்கலன்களைப் பெறல் மற்றும் வழங்கலின்போது துறைமுகத்தின் நான்கு முனையங்களிலும் அதிக நேரத்தை செலவிடவேண்டியிருத்தல், இரவில் கொள்கலன் பரிமாற்றசேவை முன்னெடுக்கப்படாததன் காரணமாக பகல்வேளையில் அதிக வாகனநெரிசல் ஏற்படல், வங்கி வசதி மற்றம் ஏனைய சேவைகளைப் பூர்த்திசெய்வதற்குக் குறைந்தபட்சம் இரண்டு நாட்களேனும் விரயமாதல், சுங்கச்சேவையைப் பெற்றுக்கொள்ளும் போது ஏற்படும் நெருக்கடிகள், எல்.சி.எல் கார்கோ விடுவிப்பை முறைமைப்படுத்தல் ஆகிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடலின்போது அவதானம் செலுத்தப்பட்டது.

பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றத்திற்கான கேந்திரநிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் பயணத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளின்போது பொருட்களுக்கான அனுமதி வழங்கல் செயற்பாடுகளில் துறைமுகம் மற்றும் சுங்கப்பிரிவு எதிர்கொண்டிருக்கும் சவால்களை வெற்றிகொண்டு, செயற்திறன்வாய்ந்த சேவை வழங்கலை முன்னெடுத்துச்செல்வதற்கு உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை சுங்கப்பிரிவு உள்ளிட்ட கட்டமைப்புக்களுடன் அமைச்சர்கள் கலந்துரையாடினார்கள்.

துறைமுகசேவை மற்றும் சுங்கச்சேவையை டிஜிட்டல்மயப்படுத்துவதன் ஊடாக மேற்படி சிக்கல்கள் பலவற்றுக்குத் தீர்வு கிடைக்கப்பெறும் அதேவேளை, அதன்மூலம் முறையானதும் செயற்திறன் வாய்ந்ததுமான சேவையை வழங்கமுடியும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதேவேளை பொருட்களுக்கான அனுமதி வழங்கல் நடவடிக்கையின்போது, களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பொருட்களைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதத்தின் விளைவாக ஒட்டுமொத்த செயற்பாட்டிலும் தாமதம் ஏற்படுகின்றது. அதற்குத் தீர்வுகாண்பதற்கு பார்க்கோர்ட் அடிப்படையிலான வரிசைப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்தோடு துறைமுக, சுங்கசேவையை மாத்திரமன்றி இதனுடன் தொடர்புடைய வங்கிச்சேவையையும் டிஜிட்டல்மயப்படுத்துவதன் ஊடாக ஒன்லைன் மூலம் அச்சேவையைப் பூர்த்திசெய்துகொள்ள முடியும். இப்பிராந்தியத்தின் கடல்மார்க்க கேந்திர நிலையமாக இலங்கை மாறுவதற்கு அது மிகமுக்கிய அடிப்படையாக அமையும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right