மன்னார் மாவட்டத்தில் 'கொரோனா' தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்தப்படுகின்ற குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் உரிய நேரத்தில் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என மன்னார் நகர சபை உறுப்பினர் திருமதி சிறிதரன் அந்தோனியம்மா குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனிமைப்படுத்தி விட்டு அவர்களை வெளியே செல்ல வேண்டாம் என தெரிவிக்கின்றனர். அதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகின்றது. அவ்வாறு தனிமைப்படுத்தினாலும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உலர் உணவு பொருட்களைக் கூட உரிய அதிகாரிகள் முதல் வாரத்தில் வழங்குவதில்லை.

 அரச சார்பற்ற நிறுவனங்களும், பொது அமைப்புக்களும் அரசாங்கத்தினால் தனிமை படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் கிடைப்பதாக நினைத்து தனிமை படுத்தப்பட்ட குடும்பங்களை கருத்தில் கொள்வதில்லை.

 இதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட எத்தனையோ குடும்பங்கள் பசி பட்டியினால் வாடி வருகின்றனர்.

இந்த அரசாங்கம் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டாலும்,  மன்னார் மாவட்டத்தில் ஐயாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் மாத்திரமே வழங்கப்படுகின்றதென்றார் .

எனவே, மன்னார்  மாவட்டத்தில் உள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி அரசினால் வழங்கப்படுகின்ற பத்தாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை முழுமையாகவும் உரிய நேரத்திலும் வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தல் ஆரம்பிக்கின்ற முதல் வாரத்திலேயே குறித்த அத்தியாவசிய பொருட்களை வழங்க முன்வர வேண்டும் என அவர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை முன் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.