துமிந்த சில்வாவிற்கான ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு பொறுப்புக்கூறலை புறக்கணிப்பதையே வெளிப்படுத்துகிறது - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

By T Yuwaraj

30 Jun, 2021 | 08:51 PM
image

(நா.தனுஜா)

துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதானது, மிகமோசமான குற்றச்செயல்களுக்கான பொறுப்புக்கூறலை அரசாங்கம் புறக்கணிப்பதையே வெளிப்படுத்துகின்றது.

அதுமாத்திரமன்றி பாரபட்சமான நிலைப்பாடுகளைக் கொண்டிராத சட்டத்தின் ஆட்சி இலங்கையில் நிறுவப்படவேண்டியதன் அவசியத்தையும் இது நன்கு உணர்த்தியிருக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையிடம் விடுத்துள்ள வேண்டுகோள் | Virakesari .lk

அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் பலவருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல்கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டமையானது, இந்தச் சட்டம் மீளாய்விற்கு உட்படுத்தப்படல் மற்றும் ஏனைய தரப்புக்கள் அதற்கான அழுத்தத்தை வழங்கல் ஆகியவற்றின் அவசியத்தை எவ்வகையிலும் இல்லாமல்செய்துவிடாது என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 16 கைதிகள் இலங்கை அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமென்றாலும், மிகவும் மோசமான அந்தச் சட்டம் உடனடியாக மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அது வலியுறுத்தவில்லை.

அண்மையில் இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. சட்டத்தின் ஆட்சியையும் மனித உரிமைகளையும் வலுப்படுத்துவதற்கான கடப்பாடுகள் பூர்த்திசெய்யப்படாவிடின், இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தின் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் கோரப்பட்டிருந்தது.

பௌத்தர்களுக்கு விசேட தினமான கடந்த 24 ஆம் திகதி, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 16 பேர் உள்ளடங்கலாக மொத்தம் 94 கைதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தப் பயங்கரவாதத்தடைச்சட்டமானது நீண்டகால தன்னிச்சையான தடுத்துவைப்பிற்கும் சித்திரவதைகள் மூலம் கட்டாய வாக்குமூலங்களைப் பெறுவதற்கும் வழிவகுத்திருக்கும்.

அதேவேளை, இச்சட்டம் குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையின சமூகங்களை இலக்குவைத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.

மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டில் அரசியல்வாதியொருவரைக் கொலைசெய்த வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட துமிந்த சில்வாவும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ள இந்தப் பொதுமன்னிப்புக்கள் அனைத்தும் தனிப்பட்ட நெருக்கங்கள் மற்றும் பாரபட்சமான நிலைப்பாடு என்பன இல்லாத சட்டத்தின் ஆட்சி இலங்கையில் நிறுவப்படவேண்டியதன் அவசியத்தை நன்கு உணர்த்தியுள்ளன.

அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் பலவருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்ட சிலர் விடுவிக்கப்பட்டமையானது, இந்தச் சட்டம் மீளாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஏனைய தரப்புக்கள் அதற்கான அழுத்தத்தை இலங்கைக்கு வழங்கவேண்டியதன் அவசியத்தையும் எந்தவகையிலும் இல்லாமல்செய்துவிடாது.

தற்போது விடுதலைசெய்யப்பட்ட 16 அரசியல்கைதிகளில் பெரும்பாலானோர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் ஏதேனுமொரு வகையில் தொடர்புகளைப் பேணியமைக்காக ஒரு தசாப்தகாலத்திற்கும் அதிகமான காலம் தடுத்துவைக்கப்பட்டவர்களாவர். அவர்களில் அநேகமானோரின் தண்டனைக்காலம் வெகுவிரைவில் முடிவிற்குவரவிருப்பதுடன் சிலர் தண்டனைக்காலத்தைப் பூர்த்திசெய்தவர்களாவர்.

ராஜபக்ஷ அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டில் பதவியேற்றுக்கொண்டதிலிருந்து குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி வந்திருப்பதுடன் அந்தச் சமூகத்தை அடக்குமுறைக்கு உட்படுத்தும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்துவந்திருக்கிறது.

மனித உரிமைகள் சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இன்னமும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அதேவேளை, முஸ்லிம் கவிஞரான அஹ்னாப் ஜசீம் கடந்த 2020 மே 16 ஆம் திகதி இதே சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்.

இத்தகைய மோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக மேலும் மீறல்களுக்கு வழிவகுக்கும் வகையிலேயே அண்மைக்காலத்தில் அதனை ராஜபக்ஷ பயன்படுத்திவருகின்றார்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழான புதிய வழிகாட்டல்கள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன்பிரகாரம் இன,மத அடிப்படையிலான அமைதியின்மை ஏற்படுவதற்குத் தூண்டுதல் அளித்ததாகக் கருதப்படும் ஒருவரை எவ்வித விசாரணைகளுமின்றி இரண்டு வருடங்களுக்கும் அதிகமான காலம் தடுத்துவைப்பதற்கு அனுமதியளிக்கப்படுகின்றது.

வடக்கிலும் கிழக்கிலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, குறித்த சட்டத்தின் கீழ் இலக்குவைக்கப்பட்ட சட்டத்துறைசார் நிறுவனமொன்றின் உரிமையாளரான சட்டத்தரணியொருவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்குத் தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையமாகக்கொண்டியங்கும் பல்வேறு சிவில் சமூக மற்றம் மனித உரிமை அமைப்புக்களுக்கு பாதுகாப்புப்பிரிவினர் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முறையான விதத்தில் திருத்தியமைக்குமாறு கடந்த பல வருடகாலமாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளடங்கலாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பலவற்றினாலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் என்பன ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ராஜபக்ஷ அரசாங்கம் 2020 ஆம் ஆண்டிலிருந்து கடந்தகாலக் கடப்பாடுகளுக்கு முரணாக செயற்பட ஆரம்பித்திருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கான திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கருத்து வெளியிட்டிருக்கிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டில் தேர்தல் பிரசாரமொன்றின்போது பாரதலக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளடங்கலாக நான்குபேரை சுட்டுக்கொன்ற வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுள் ஒருவரான துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதானது, மிகமோசமான குற்றச்செயல்களுக்கான பொறுப்புக்கூறலை அரசாங்கம் புறக்கணிப்பதையே வெளிப்படுத்துகின்றது.

துமிந்த சில்வாவிற்கான மரணதண்டனை கடந்த 2018 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தினாலும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவரினாலும் கண்டனம் வெளியிடப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் உரிய சட்ட நடைமுறைகளும் வெளிப்படைத்தன்மையும் பின்பற்றப்பட்டிருக்காவிட்டால், அது நியாயமற்றதும் முற்றிலும் தன்னிச்சையான தீர்மானத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையேயாகும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.

மேலும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டிருக்கின்ற - ராஜபக்ஷவிற்கு நெருக்கமான பலரை வழக்குகளிலிருந்து விடுவிக்குமாறு பரிந்துரை செய்திருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்ததன் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தின் ஆட்சியை மீறியிருக்கிறார்.

அத்தோடு சிரேஷ்ட நீதிபதிகளை நியமிப்பதற்கான அதிகாரத்தை முழுமையாக ஜனாதிபதிக்கு வழங்கக்:கூடியவாறான அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றியதன் ஊடாக அவர் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.

எனவே மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளை முடிவிற்குக்கொண்டுவரக்கூடிய வகையிலான முறையான சட்ட சீரமைப்பு ஒன்றை செய்யும் வரையில் ஏனைய சர்வதேச தரப்புக்கள் இலங்கை மீது தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right