(நா.தனுஜா)
குற்றவாளியொருவருக்கு  ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும்போது குறித்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, சட்டமா அதிபர், நீதியமைச்சர் ஆகியோரிடம் அறிக்கை கோரவேண்டும் என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு அறிக்கைகோராமல் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவே முடியாது என்று அதில் குறிப்பிடப்படவில்லை. துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டபோது மேற்படி தரப்பினரிடம் அறிக்கை கோரப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது. அவ்வாறு கோருவது வரவேற்கத்தக்க விடயம் என்றாலும், அறிக்கை கோருவதென்பது அரசியலமைப்பில் ஓர் கட்டாய நிபந்தனையாகக் குறிப்பிடப்படவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மகநாமஹேவா தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடரமுடியாது என்றாலும், அதற்கு விதிவிலக்கான சந்தர்ப்பங்களும் உள்ளன. அதன்படி இவ்வாறு  ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் அது நியாயமற்றது என்றோ அல்லது மனித உரிமை மீறல் என்றோ எவரேனும் கருதினால், அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடரமுடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் பொசன் பௌர்ணமி தினத்தன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அரசியல் கைதிகள் உள்ளடங்கலாக சிறைக்கைதிகள்  விடுவிக்கப்பட்டபோது பாரதலக்ஷ்மன் பிரேமசந்திர கொலைவழக்கில் குற்றவாளியாக  அடையாளங்காணப்பட்டிருந்த  துமிந்த சில்வாவும் விடுதலை செய்யப்பட்டார். இவ்விடயம் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்த நிலையில், 'ஜனாதிபதியினால் வழங்கப்படும் பொதுமன்னிப்பு' தொடர்பில் தெளிவுபடுத்தும் கலந்துரையாலொன்று இன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே பிரதீபா மகநாமஹேவா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் வருமாறு:

கேள்வி - ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படல் என்றால் என்ன?

பதில் - ஏதேனுமொரு நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்ட ஒருவரை விடுதலை செய்வதற்கு அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்குக் கிடைக்கும் அதிகாரமே இதுவாகும். ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பைப் பொறுத்தவரை, குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்படாமல் சந்தேகநபராக இருக்கும் ஒருவருக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கமுடியும். எனவே பொதுமன்னிப்பு வழங்குவதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாகவே ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 194 நாடுகளில் அநேகமானவை மரணதண்டனையை அமுல்படுத்துவதை இடைநிறுத்தியிருக்கின்றன. மரணதண்டனை என்பது மனிதனொருவன் சமூகத்தில் உயிர்வாழ்வதற்குக் கொண்டிருக்கும் உரிமையைப் பறிப்பதாகவே அமையும் என்றும் அதனால் இந்தத் தண்டனை நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் அந்நாடுகள் கருதுகின்றன. நீதிமன்றத்தின் தீர்ப்பைமீறி செயற்படமுடியாது என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டிய கடப்பாடு குறித்தும் சிந்திக்கவேண்டும். மரணதண்டனை என்பது மனித உரிமைகளுக்கு மாத்திரமன்றி, பௌத்த தர்மத்திற்கும் முரணானதாகும்.

கேள்வி - குற்றவாளியொருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்கள் எவை?

பதில் - 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பிலேயே குற்றவாளியொருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான  சரத்து உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையின் எந்தவொரு நீதிமன்றத்தினாலும் எந்தவொரு குற்றத்தையும் புரிந்ததாகத்  தீர்மானிக்கப்பட்டு  தீர்ப்பளிக்கப்பட்ட  குற்றவாளிக்கு  ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யமுடியும். அண்மைக்காலங்களில் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 19 ஆம், 20 ஆம் அரசியலமைப்புத் திருத்தங்களிலும் 'ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கல்' தொடர்பான சரத்து நீக்கப்படவில்லை.

அரசியலமைப்பின் 34/1 ஆவது சரத்தில் குற்றவாளியொருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுமன்னிப்பு வழங்குவதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட நபரின் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளிடம் அறிக்கை பெறப்பட வேண்டும். பின்னர் அது குறித்து சட்டமாதிபரின் அபிப்பிராயத்தைப் பெறவேண்டும். அதுமாத்திரமன்றி இந்த ஆவணங்களை நீதியமைச்சருக்கு அனுப்பி, அவரது பரிந்துரையையும் பெறவேண்டும்.

கேள்வி - ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படல் தொடர்பான வரலாறு பற்றி சுருக்கமாக விளக்கமுடியுமா?

பதில் - ஆம், ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதென்பது இதுவே முதன்முறையல்ல. இலங்கையிலும் உலகநாடுகளிலும் முன்னர் பலதடவைகள் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரம் சில நாடுகளில் ஜனாதிபதிக்கும், சில நாடுகளில் பிரதமருக்கும், வேறு சில நாடுகளில் ஆளுநருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க நீதியமைச்சராகப் பதவிவகித்த காலப்பகுதியில், அதாவது 1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பு நடைமுறையில் இருந்தபோது குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் பிறிதொரு நடைமுறை பின்பற்றப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவொன்றினால் பொதுமன்னிப்பு வழங்குவது குறித்த பரிந்துரை ஆராயப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதனடிப்படையில் இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடரமுடியாது என்று அரசியலமைப்பில் கூறப்பட்டிருந்தாலும், அதற்கு விதிவிலக்கான சந்தர்ப்பங்களும் உள்ளன. ஏனெனில் எப்போதும் நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை விடவும் மக்களுக்குரிய இறையாண்மையே மேலானதாகக் கருதப்படுகின்றது. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் அடிப்படைய மனித உரிமை மீறப்படுவதாகக் கருதினால் எந்தவொரு தரப்பினரும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடரமுடியும்.

உதாரணமாக, ரோயல் பார்க் கொலைவழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும் அந்தத் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்செய்யப்பட்டது. ஆகவே தற்போதும் அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பதாகக் கருதும் பட்சத்தில் எந்தவொரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழங்குத்தொடரமுடியும்.

கேள்வி - 'ஜனாதிபதி பொதுமன்னிப்பு' அமுலில் உள்ள நாடுகள் எவை?

பதில் - உலகளாவிய ரீதியில் 137 இற்கும் அதிகமான நாடுகளில் இவ்வாறு குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குதல் என்பது நடைமுறையிலுள்ளது. பொதுமன்னிப்பு வழங்கல் நடைமுறை எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்து அந்தந்த நாடுகளின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகளுக்கு அமைவாக முன்னாள்  ஜனாதிபதிகளான  பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரால் குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதேவேளை ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் அத்தகைய தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸில் சவாலுக்கு உட்படுத்தக்கூடிய வாய்ப்பும் உள்ளது. பிரான்ஸ், இத்தாலி, கனடா போன்ற நாடுகளிலும் பெருமளவிற்கு இலங்கையினால் பின்பற்றப்படும் நடைமுறையை ஒத்த அடிப்படையில் குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட எஸ்.பி.திஸாநாயக்க, பின்னர் விடுவிக்கப்பட்டமையையும் இங்கு குறிப்பிடமுடியும்.