(எம்.ஆர்.எம்.வசீம்)

நீர்வழங்கல் அமைச்சுக்கு தேவையான அனைத்து சுத்திரகரிப்பு இயந்திரங்களையும் உள்நாட்டிலேயே கொள்வனவுசெய்ய இருக்கின்றோம்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, இது குறித்து நாங்கள் விசேட கவனம் செலுத்தி சுத்திகரிப்பு இயந்திரங்களை உற்பத்தி செய்வோம்.

அதுதொடர்பான ஒப்பந்தங்களும் உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் மூலமே மேற்கொள்ளப்படும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ள விக்கிலிய தோட்ட வைத்தியசாலை: வாசுதேவ  நாணயக்கார உறுதி | Virakesari.lk

நீர்வழங்கல் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

சுத்தமான குடிநீரை 24 மணிநேரமும் தொடர்ந்து வழங்குவதே எமது குறிக்கோள். அதனால் குடிநீரை வழங்கும் போது பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குவதை உறுதி செய்வதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் ஏற்படுத்தி தருவோம். குறிப்பாக இதற்கு தேவையான சுத்திகரிப்பு இயந்திரங்களை நாட்டிலேயே உற்பத்திசெய்ய நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம்.

கொலன்னாவையில் இருக்கும் அரசுக்கு சொந்தமான தொழிற்சாலையின் ஊடாக நாட்டிற்குத் தேவையான அனைத்து சுத்திகரிப்பு இயந்திரங்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.

வெளிநாட்டு நிதிகளை எதிர்பார்ப்பதை நாம் படிப்படியாக குறைக்க பணியாற்றி வருகிறோம். ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் இந்த நேரத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.

ஆனால் எதிர்காலத்தில் அவற்றை ரத்துச் செய்து உள்நாட்டு நிதியங்களுக்கு மாற்ற முடியும். ஏனெனில்  டொலர்கள் மூலம் கடன்களை மீளச் செலுத்துவது எங்களுக்கு கடினமானது. கடன்களை ரூபாயின் மூலம் மீள செலுத்துவது எளிதானது. இது இந்த நாட்டிற்கும் நல்லது. நமது பொருளாதாரத்திற்கும் வலிமையானது.

மேலும் இயந்திரங்கள் கொள்வனவு தொடர்பில் எதிர்கால ஒப்பந்தங்கள் அனைத்தும் உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் மூலம் செய்யப்பட வேண்டும் என்பது எமது நோக்கமாகும்.

நீர் வழங்கல் சபையில் உள்ள உள்நாட்டு பொறியியலாளர்களால் பல்வேறு நீர் வழங்கல்   திட்டங்களைத் தயாரித்த பின்னர், உள்ளூர் ஒப்பந்தக்காரர்களால் அவற்றை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன், அவை ஏற்கனவே செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. அவர்கள் குழாய்களை பொருத்துதல், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், நீர் வழங்கும் இடங்களை உருவாக்குதல் போன்ற அனைத்து வேலைகளையும் செய்வார்கள் என்பது எமது நம்பிக்கையாகும். 

எனவே தேவையான எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் உள்நாட்டில்  காணப்படுவதால், இந்த பணத்தை கிராமங்களில் இருக்கும் நமது தொழிலாளர்கள் மத்தியில் சென்றடையச் செய்வது, நாட்டிற்கு மிகவும் பயனளிக்கும் என்றார்