(எம்.எப்.எம்.பஸீர்)

மின்னேரிய - ஹபரனை  தேசிய வன விலங்குகள் பூங்காவின்  ஒரு பகுதியில்,  சட்ட விரோதமாக யானை குட்டியொன்றினை பிடிக்கும் நடவடிக்கைகள் இடபெறுவதாக, வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகத்துக்கு இடமான முறையில் வனப்பகுதியிலிருந்து சென்ற இராணுவ வாகனங்கள் இரண்டை நிறுத்த முயன்றமையை மையப்படுத்தி வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மரண அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடாத்தியதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள், அனுராதபுரம் கட்டளை தளபதியாக செயற்படுவதாக கூறப்படும் மேஜர் ஜெனரால்  மொஹான் ரத்நாயக்கவுக்கு எதிராக ஹபரனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், தாக்குதல் நடாத்தி வன பாதுகாப்பு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கெக்கிராவை நீதிவான் சமன் வெரனிகொட வன ஜீவிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டார்.

மின்னேரியா வன விலங்குகள் சரணாலய பொறுப்பாளர் பாதிய மடுகல்ல நேற்று கெக்கிராவ நீதிமன்றில் மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக முன் வைத்த விடயங்களை அடுத்தே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

யானைக் குட்டிகளை சட்ட விரோதமாக கடத்தும் நடவடிக்கை ஒன்று தொடர்பில் தமது அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்ததாகவும் அது தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி இரவு 10.30 மனியளவில் விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும்  மின்னேரிய வன விலங்கு சரணாலய பொறுப்பதிகாரி பாத்திய மடுகல்ல தனது அரிக்கை ஊடாக நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து வன விலங்குகள் பூங்காவுக்குள் இருந்து வெளியேற முடியுமான அனைத்து வாயில்களிலும் விஷேட காவல் அரண்களை ஏற்படுத்தி, வன ஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களம் விஷேட சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.

இராணுவத்தின் இரு வாகனங்கள் 

இதன்போதே, மின்னேரிய வன  விலங்குகள் சரணாலயத்தின்  மேற்கு எல்லையை ஒட்டிய ஹபரனை பகுதியில், சரணலயத்தில் இருந்து வந்த  இரு வாகனங்களை முதல் காவலரணில் இருந்த அதிகாரிகள் மறித்துள்ளனர். எனினும் அவை குறித்த கட்டளையை மீறி வேகமாக பயணித்துள்ள நிலையில், ஏனைய வன ஜீவிகள் பாதுகாப்பு அதிகரிகளினால் ஏற்படுத்தப்பட்டிருந்த காவலரண்களிலும் கட்டளையை மீறி பயணித்துள்ளன.

இதனையடுத்து அந்த கெப் ரக வாகனங்கள்  இரண்டினையும் வன ஜீவிகள் பாதுகாப்பு அதிகாரிகள் பின் தொடர்ந்து சென்ற போது அவை இராணுவ வாகனங்கள் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அது தொடர்பில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள், கல்குளம் இராணுவ பொலிஸ் காவல் மையத்துக்கு அறிவித்துள்ளனர்.

இதன்போது அந்த வாகனத்தை நிறுத்த முடியாது எனவும், அது மேஜர் ஜெனரால் பயணிக்கும் வாகனம் என அங்கிருந்து பதில் கிடைத்ததாக வன ஜீவராசிகள்  பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அவ்விரு வாகனங்களையும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் பின் தொடர்ந்து சென்ற போதும், அவை அனுராதபுரம்  21 ஆம்  கட்டளை தலைமையகத்துக்குள் சென்றுள்ளது.

இந்நிலையில், இராணுவ முகாமுக்குள் செல்ல வன ஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அனுமதி கிடைக்காததால், அவர்கள் அங்கிருந்து திரும்பியுள்ளனர்.

இரு தரப்பினரும் முறைப்பாடு

இந்நிலையில், திரும்பிக்கொண்டிருந்த வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளை ஹபரனை -  பளுகஸ்வெவ பகுதியில் வைத்து இராணுவ சோதனை சாவடியில் இராணுவத்தினர் மறைத்துள்ளனர். இதன்போது வன ஜீவராசிகள் அதிகாரிகள் அங்கு வாகனத்தை நிறுத்தவே, அவர்களை பின் தொடர்ந்து வந்த  இராணுவ வாகனங்களில் இருந்து இராணுவத்தினர் சிலர் இறங்கி வந்துள்ளனர்.

அதிலிருந்த உயர் அதிகாரி ஒருவர் 'நான் தான் அனுராதபுரம் 21 ஆவது கட்டளை மையத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க என தன்னைத் தானே அறிமுகம் செய்து வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும்,  என்.டப்ளியூ.கே. வாசல எனும் அதிகாரி மீது தாக்குதல் நடாத்தியதாகவும் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்ட்டுள்ளது.

இந்நிலையிலேயே இந்த விடயம் தொடரில் முழுமையானறிக்கையை சமர்ப்பிக்க கெக்கிராவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.