(எம்.ஆர்.எம்.வசீம்)

2021 ஏப்ரல் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தின் சபா மண்டபம் மற்றும் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அடுத்த வாரம்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஏற்பட்டது போன்ற குழுப்பமான சூழ்நிலை மீண்டும் பாராளுமன்றத்தில் ஏற்படாதிருப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை பரிந்துரைப்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால் 8பேர் கொண்ட குழு கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நியமிக்கப்பட்டது. 

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வல்ல, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், ஆர்.எம்.ரஞ்சித் மத்துமபண்டார, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்  உள்ளடங்குகின்றனர்.  

குறித்த குழு நேற்று பாராளுமன்றத்தில் கூடியபோதே இதுதொடர்பான அறிக்கையை அடுத்தவாரம் சபாநாயகருக்கு கையளிக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக தெரிவித்தார்.  

இதற்கமைய இதுபோன்ற சம்பவங்களினால் ஒட்டுமொத்த பாராளுமன்றத்திலும் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்த இக்குழு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான நீண்டகால மற்றும் குறுகியகால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது. இது தொடர்பான முழுமையான அறிக்கையை சபாநாயகரிடம் கையளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.