(எம்.மனோசித்ரா)

எம்.வி. எக்ஸ்பிரஸ் - பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயால் இடம்பெற்றுள்ள கடல் மாசுறல் தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக தேவையான வசதிகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நீதி அமைச்சரால்  ஏனைய அமைச்சர் மற்றும் சட்டமா அதிபரின் பங்குபற்றலுடன் ஆலோசனை நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்பட்டது.

அதற்கமைய, காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்காகவும், தீயால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்வதற்காகவும் ஐந்து உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இழப்பீடு கோரல் மற்றும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக மும்மொழிகளிலும் பத்திரிகை விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால் கப்பல் உரிமையாளருக்கும் கெப்டனுக்கும் மற்றும் பிரதிநிதி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்தமை தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழி நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகள் மீள வளர்த்தல் மற்றும் வனவளப்பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இவ்வகையான விபத்துக்களின் போது நடவடிக்கைகளை மேற்கொண்டு அனுபவம் கொண்ட சட்ட வல்லுனர்களின் சேவையை எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்கு அவசியமாவதால், அதற்கு பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்காக விருப்பத் தெரிவிப்புக் கோரப்பட்டுள்ளதுடன், 08 சர்வதேச சட்ட நிறுவனங்கள் அதற்காக தமது விருப்பைத் தெரிவித்துள்ளன.

சட்டமா அதிபரால் குறித்த கப்பலின் காப்புறுதியாளர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் இடைக்கால இழப்பீட்டுத் தொகையாக 720 மில்லியன் ரூபாய்களை செலுத்துவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நீதி அமைச்சர் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆலோசனைச் செயன்முறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட படிமுறைகள் தொடர்பாக தமது உடன்பாடுகளை வழங்குவதற்கும் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களிடையே மிகவும் பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்காக சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலான குழுவொன்றை நியமிப்பதற்காக அங்கீகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.