(எம்.மனோசித்ரா)
நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு தொடர்பான பிரச்சினை இல்லையென்று கூற முடியாது. ஆனால் இதன் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்படாது. அதற்கமைய அரசாங்கம் செயற்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு தொடர்பான பிரச்சினை இல்லையென்று கூற முடியாது. எனினும் இது தொடர்பில் நாம் கடும் அவதானத்துடன் செயற்படுகின்றோம். காரணம் எமக்கு இவ்வாண்டுக்குள் மீள செலுத்த வேண்டிய கடன் தவணைகள் உள்ளன. ஜூலை 26 ஆம் திகதிக்குள் சுமார் ஒரு பில்லியன் டொலர் கடன் மீள செலுத்த வேண்டியுள்ளது.

எனினும் தற்போது நாட்டில் நான்கரை பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இருப்பே காணப்படுகிறது. எனவே இந்த பிரச்சினைகள் இல்லை என்று கூற முடியாது. அவை தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் பலவற்றையும் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

ஆனால் நாம் சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் இல்லை என்ற போதிலும் , அந்த அபாயத்தை உதாசீனப்படுத்தவில்லை. மூன்று மாதங்களுக்கு தேவையான அந்நிய செலாவணி இருப்பு தற்போது எம்வசம் உள்ளன. எனினும் இதனை நிர்வகித்துச் செல்வது சவாலாகும். காரணம் இது முழு உலகும் முகங்கொடுத்துள்ள பிரச்சினையாகும்.

வருமான வழி குறிப்பாக அந்நிய செலாவணி உதாரணமாக ஆடை தொழிற்துறையில் 23 வீதம் அந்நிய செலாவணி கிடைக்கப்பெறுகிறது. வெளிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்கள் ஊடாக 65 வீத அந்நிய செலாவணி கிடைக்கப்பெறுகிறது. ஆனால் பெற்றோலியம், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட தேவைகளும் காணப்படுகின்றன.

உணவு பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டங்களையும் சர்வதேச ரீதியில் முன்னெடுத்துள்ளோம். இதற்கான நிதி தேவை தொடர்பிலும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றோம். அதற்கமைய உணவு பற்றாக்குறை ஏற்படும் நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கான சவாலை ஏற்று செயற்படுகின்றோம் என்றார்.