(செ.தேன்மொழி)
நாடளாவிய ரீதியில் பதிவாகிய வீதி விபத்துகள் காரணமாக இன்று செவ்வாய்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சாரதிகள் தொடர்ந்தும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நாடளாவிய ரீதியில் இன்றுகாலை(29.06.2021) ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் வீதி விபத்துகள் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளர். அதற்கமைய, நேற்று இடம்பெற்ற விபத்துகளில் மாத்திரம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி காயமடைந்திருந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் , இந்த விபத்துகளின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் , பாதசாரதிகள் 3 பேரும் , முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதேவேளை , தற்போது வீதி விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 9 - 10 வரையில் அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. அதற்கமைய காயமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கின்றன. இதனால் சாரதிகள் இது தொடர்பில் மேலும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவுவதால் மோட்டர் சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் ஏனைய வாகன சாரதிகள் மிகவும் கவனத்துடன் தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.