பொத்துவிலில் ஒரு வாரமாகியும் இன்னும் வீடு திரும்பாத நிலையில் மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 23 ஆம் திகதி அதிகாலை பொத்துவில் அறுகம்பை மீன்பிடித் துறையிலிருந்து இயந்திரப்படகில்  கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொத்துவில் களப்புக்கட்டு பகுதியைச்  சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான மொகமட் தாஹா என்பவரும்  பொத்துவில் பசரிச் சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான 32 வயதுடைய  ஜெளபர் தாஜுதீன் என்ற இருவருமே  ஒரு வாரமாகியும் இன்று வரை வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளனர்.

தினமும் அதிகாலை கடலுக்கு மீன் பி்டிக்கச் சென்றால், மதியம் வீடு வந்துவிடுவார்கள் அல்லது இறுதி நேரமாக பி.ப.இரண்டு மணிக்குள் வழமையாக வீடு திரும்புவார்கள். ஆனால் தற்போது ஒரு வாரமாகியும் எங்களது தந்தை வீடு திரும்பவில்லை என  6 பிள்ளைகள் கண்ணீரோடு தங்களது தந்தைகளை தேடி அலைகின்றனர்

இந்நிலையில், காணாமல் போன இருவரையும்  இலங்கை கடற்படையினர்கள் இதுவரை தேடி வருவதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.