(எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, தனதும் தன் குடும்பத்தாரினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபருக்கு விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

ஷானி அபேசேகர உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம்! | Virakesari.lk

 

மூன்று பக்கங்களைக் கொண்ட அந்த கடிதத்தில், ஷானி அபேசேகர தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் நிலவும்  பாதுகாப்பு அச்சுறுத்தல்களை  விரிவாக விளக்கியுள்ளார்.

அதன்படி,  நியாயமாக நடந்துகொண்டு தனதும் தன் குடும்பத்தாரினதும் பாதுகாப்பை உறுதி செய்வீர்கள் என  நம்புவதாகவும் ஷானி அபேசேகர பொலிஸ் மா அதிபருக்கு குறிப்பிட்டுள்ளார்.

 

குறித்த கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சுருக்கமாக வருமாறு:

 

1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி பயிற்சி நிலை உப பொலிஸ் பரிசோதகரான நான் பொலிஸ் சேவையில் இணைந்தேன்.  கறுவாத்தோட்டம் , மருதானை பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய பின்னர் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி சி.ஐ.டி.யில் முதன் முதலாக கடமைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டேன். 

அத்துடன் கடந்த 2009 ஏப்ரல் முதலாம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் சேவை செய்த பின்னர் மீள சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டு, 2019 நவம்பர் 21 ஆம் திகதிவரை அங்கு கடமையாற்றினேன்.

 2020 ஜனவரி 7 ஆம் திகதி காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளரக இடமாற்றம் பெற்றதுடன்,  2020 ஜூலை 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கம்பஹா நீதிமன்றில் உள்ள பீ 1536/20 எனும் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டேன்.

 இதன்போது கடந்த 2020 நவம்பர் 24 ஆம் திகதி விளக்கமறியலில் இருந்த போது கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நான்,   பொலன்னறுவை கல்லேல்ல கொவிட் 19 தொற்று இடைத் தங்கல் முகமிலும், பின்னர் வெலிகந்த வைத்தியசாலையிலும் பின்னர் ஐ.டி.எச்.  வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்றேன்.

 அதன்பின்னர் 2021 ஜனவரி 18 ஆம் திகதிவரை இறுதய கோளாறு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றிருந்தேன்.

 இவ்வாறான நிலையிலேயே 2021 ஜூன் 16 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றம்  அளித்த பிணை அனுமதிக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டேன்.

 எனது பொலிஸ் சேவையில் நான் நேர்மையாக பல விசாரணைகளை முன்னெடுத்தேன். அதனால் இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் அதிகாரிகள், பாதாள உலக குழு உறுப்பினர்கள்,  பயங்கரவாத குழுக்களை சேர்ந்தோரை நான் கைது செய்துள்ளேன். அவர்களுக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை உள்ளிட்டவை கிடைக்கப் பெறவும்  எனது விசாரணைகள் காரணமாகின.

 நான் கைது செய்யப்பட முன்னர் 2020.01.7 ஆம் திகதி இரவு 11.23 மணிக்கு எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் எனது குடும்பததாரை கொலை செய்துவிடப் போவதாக மிரட்டப்பட்டிருந்தேன்.  அது தொடர்பில் எனது மனைவி கடந்த 2020.01.08 ஆம் திகதி  முறைப்பாடளித்திருந்தார். எனினும் அதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

 இதற்கு முன்னர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனுக்கு,  தேசிய உளவுச் சேவை வழங்கிய அறிக்கையில் எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். அதனால் எனக்கும், எனது வீட்டுக்கும் மேலதிக அதிரடிப் படை பாதுகாப்பு முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் வழங்கப்பட்டது.

 எனினும் நான் சி.ஐ.டி.யிலிருந்து காலிக்கு இடமாற்றப்படும் போது நீங்கள் அந்த பாதுகாப்பினை பறித்தீர்கள்.

 கடந்த 10 வருடங்களுக்கு முன்னர், எனக்கு இருந்த உயிர் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இரு துப்பாக்கிகளை பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சின் ஊடாக எழுத்து மூல அனுமதியைப் பெற்றிருந்தேன்.   எனினும் நான் கைது செய்யப்பட்டதும் குறித்த துப்பாக்கிகளை எனது மனைவி, பொரளை பொலிஸ் நிலையத்தில் எனது ஆலோசனைக்கு அமைய ஒப்படைத்திருந்தார்.

 இந் நிலையில் தற்போது எனது உயிருக்கும், எனது குடும்பத்தாரின் உயிருக்கும்  அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

 நான் முன்னெடுத்த விசாரணைகளில் அரசியல் வாதிகள், இராணுவ, கடற்படையினர், பொலிசார், பாதாள உலக குழு உறுப்பினர்கள், பயங்கரவாத குழுக்களை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  அந்த அச்ச்சுறுத்தல்கள் நீண்டன.

 ஏற்கனவே எனது பதுகாப்பு தொடர்பில்  பாதிக்கப்பட்டோர், சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பிலான பொலிஸ் பிரிவு,  மனித உரிமைகள் ஆணைக் குழு,  பிரதம நீதியரசர், பொலிஸ் ஆணைக் குழு, சட்ட மா அதிபர் ஆகியோருக்கும் உங்களுக்கும் முறைப்பாடளித்துள்ளேன்.

 இவ்வாறான நிலையிலேயே நிலைமையை நியாயமாக ஆராய்ந்து எனதும், எனது குடும்பத்தாரினதும் பாதுகாப்பை உறுதி செய்வீர்கள் எனும் நம்பிக்கையில் இக்கடிதத்தை எழுதிகிறேன்.' என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.