(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியிலுள்ள சிறிய மற்றும் நடுத்தரளவான உற்பத்திக் கைத்தொழில் மற்றும் வணிகங்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்குக் கொள்கை ரீதியிலேயே தீர்வுகாணப்பட வேண்டும்.

அந்தவகையில் உள்நாட்டுக்கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்று கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச பாராளுமன்றக் குழு கூட்டங்களுக்கு செல்ல நீதிமன்றம் அனுமதி |  Virakesari.lk

இங்கை வர்த்தக சம்மேளனத்தினால் இன்று திங்கட்கிழமை 'தேசிய சிறிய மற்றும் நடுத்தரளவான வர்த்தக மாநாடு' இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாடளாவிய ரீதியிலுள்ள சிறிய மற்றும் நடுத்தரளவான உற்பத்தி வணிகங்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதற்கு கொள்கை ரீதியில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் பல உள்ளன.

இலங்கையானது பொருளாதார மூலோபாயக்கொள்கைகளின் அடிப்படையில் ஏற்றுமதியை அதிகரிப்பதுடன் இறக்குமதியை மட்டுப்படுத்தும் கொள்கையைப் பின்பற்றுவதை அனைவரும் அறிந்திருப்பார்கள்.

உள்நாட்டுக் கைத்தொழிலை ஊக்குவிப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான பங்களிப்பை கைத்தொழில் அமைச்சு உயர்மட்டத்தில் வழங்கிவருகின்றது. மேலும் இத்துறையில் காணப்படும் சவால்களை எதிர்கொண்டு முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏற்றவகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.

இம்மாநாட்டின் தொனிப்பொருளாக அமைந்துள்ள விடயத்துடன் தொடர்புடைய மூன்று முக்கிய காரணிகள் குறி;த்து நான் அவதானம் செலுத்தியிருக்கிறேன்.

அதில் முதலாவது மூலதனம், இரண்டாவது தொழில்நுட்பம், மூன்றாவது புத்தாக்கமாகும். குறிப்பாக உள்நாட்டுக் கைத்தொழில் மேம்பாட்டைப் பொறுத்தவரை, இம்மூன்று காரணிகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றன.

21 ஆம் நூற்றாண்டில் அறிவுத்திறன் என்பது முக்கியமான மூலதனமாக மாறியதிலிருந்து அறிவுத்திறன் மற்றும் திறன் முகாமைத்துவம் என்பன உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் பிரதான பங்கொன்றை வகிக்கின்றன.

எனினும் பல்தேசியக்கம்பனிகள் மற்றும் பாரியளவான வணிகங்கள் ஆகியவற்றுக்கிடையில் சிறிய மற்றும் நடுத்தரளவு வணிக முயற்சியாளர்கள் சிக்கித்தவிக்கிறார்கள்.

மீன்பிடிப்பதற்குத் தூண்டிலைப் பயன்படுத்தும் உள்நாட்டு மீனவர்கள், பொருளாதார அபிவிருத்தியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சமாந்தரமாகப் பயணிக்கவேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள்.

இதில் நவீன தொழில்நுட்பத்துறையின் பங்களிப்பும் இன்றியமையாததாகும். எமக்கென நவீன தொழில்நுட்ப உபகரணங்கள், இயந்திரங்கள் என்பன கிடைத்தாலும் அதன் உருவாக்கமோ, உற்பத்தியோ எமது நாட்டைச் சார்ந்ததல்ல. இவ்வாறான நவீனபோக்குகளைப் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கே துறைமுகநகரம் ஓர் சவாலாக மாறியிருக்கின்றது.

இவையனைத்தையும் வாயால் கூறுவது சுலபம். ஆனால் நடைமுறைப்படுத்துவதே மிகவும் கடினம் என்று சிலர் கருதலாம். ஆனால் முறையான கொள்கைத்திட்டத்தின்கீழ் உள்நாட்டுக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் கடந்த காலத்தில் மேற்கொண்டிருக்கின்றோம்.

கைத்தொழில் அமைச்சின் தலைமைத்துவத்தின்கீழ் உருவாக்கப்பட்ட 'மேட் இன் ஸ்ரீலங்கா' திட்டம் அதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். எனவே நாம் ஆரம்பித்துவைத்த இடத்திலிருந்து முன்நோக்கிச் செல்லுமாறு அனைவரிடமும் கோருகின்றோம். அதற்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.