(எம்.மனோசித்ரா)
பஷில் ராஜபக்ஷ அல்லது அரசாங்கத்திலுள்ள எவராவது ஒருவரால் எரிபொருள் விலை மீண்டும் குறைக்கப்பட்டால் அது சிறந்த விடயமாகும். ஆனால் இவர்கள் அரசியல் சூதாட்டத்திற்கே தயாராகின்றனர். ஒத்துழைப்புடன் அரசாங்கமொன்றை நிர்வகித்துச் செல்ல முடியாத இயலாமையே ஆளுந்தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் மூலம் தெளிவாகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற பிரவேசத்தில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. அவர் இதற்கு முன்னரும் அரசாங்கத்தில் பல முக்கிய பதவிகளை வகித்திருக்கிறார். கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய இரு விசேட ஜனாதிபதி செயலணிகளின் தலைவராக அவர் பதவி வகித்தார்.

அவற்றில் ஒன்று உணவு பகிர்ந்தளித்தலுடன் தொடர்புடையதும் மற்றையது கொவிட் கட்டுப்படுத்தலுடன் தொடர்புடையதுமாகும். ஆனால் இவை இரண்டும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டனவா? எனவே அவரால் புதிதாக முன்னெடுப்பதற்கு எதுவும் இல்லை. காரணம் அவர் தற்போதும் அரசாங்கத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

எனவே பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ, பிரதமராகவோ நியமிக்கப்படுவதில் எவ்வித சிக்கலும் கிடையாது. பஷில் ராஜபக்ஷ என்பவர் நிறைவேற்றதிகார ஜனாதிபதியை விட அதிகாரம் மிக்கவரா என்று அவர் தொடர்பில் கருத்துக்களை வெளியிடும் அமைச்சர்களிடம் கேள்வியெழுப்ப விரும்புகின்றோம்.