(எம்.மனோசித்ரா)
தேர்தல்களின் போது அரசாங்கத்திற்கு ஆதரவளித்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர், எல்லே குணவங்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் மீதா ஜனாதிபதி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் கூறுகையில், தேர்தலின் போது தனக்கு ஆதரவளித்த சிலர் தற்போது தனிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையினால் தன்னையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவதற்கு முன்னின்று செயற்பட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர் , எல்லே குணவங்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் மீதா ஜனாதிபதி இவ்வாறு குற்றஞ்சுமத்துகின்றார் என்ற சந்தேகம் எழுகிறது.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்து வருகின்றார். இந்த அரசாங்கத்திடம் இவ்வாறானதொரு செயற்பாட்டை எதிர்பார்க்கவில்லை என்று பெங்கமுவே நாலக தேரர் அண்மையில் தெரிவித்திருந்தார். அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாக செயற்படுகின்றமையால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களின் காரணமாகவா ஜனாதிபதி இவ்வாறானதொரு விடயத்தைக் கூறியுள்ளார்.

அவ்வாறில்லை என்றால் ஜனாதிபதியின் வெற்றிக்காக பாடுபட்ட நிபுணர்கள் குழு அல்லது நாட்டு மக்கள் மீதா அவர் இவ்வாறு குற்றஞ்சுமத்துகின்றார்? ஆனால் அரசாங்கம் முறையான செயற்பாடுகளை முன்னெடுக்காவிட்டால் அதனை விமர்சிக்கும் உரிமை அரசாங்கத்திற்கு காணப்படுகிறது. இவ்வாறானதொரு நிலைமையிலேயே தற்போது அரசாங்கம் காணப்படுகிறது என்றார்.