நிரந்தர நியமனம் குறித்து ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

By T Yuwaraj

28 Jun, 2021 | 10:12 PM
image

(நா.தனுஜா)

வேலையில்லாப்பட்டதாரிகளுக்கு கடந்த 2020 செப்டெம்பர் 2 ஆம் திகதி அரசாங்கம் அரச வேலைவாய்ப்பை வழங்கியிருந்தது.

எனினும் அவர்களுக்கான பயிற்சிக்காலம் முடிவடையவுள்ள நிலையிலும், அவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே அவர்களனைவருக்கும் எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலையம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

6 கோரிக்கைகளை முன்வைத்து அரசிற்கு காலஅவகாசம் - ஒன்றிணைந்த அபிவிருத்தி  உத்தியோகத்தர் மத்திய நிலையம் | Virakesari.lk

இதுகுறித்து ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலையத்தினால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் விவகாரத்தில் கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களோ அல்லது தற்போதைய அரசாங்கமோ முறையான செயற்திட்டமொன்றைக் கொண்டிருக்கவில்லை.

கடந்த 2004, 2012, 2016, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய வருடங்களில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்ட போதிலும், அக்காலப்பகுதியில் வேலைவாய்ப்பைக்கோரி பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரியளவான போராட்டங்களின் விளைவாகவே அது சாத்தியமானது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

வருடாந்தம் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு வலியுறுத்தியே வேலையில்லாப்பட்டதாரிகள் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

கடந்த 2004 ஆம் ஆண்டில் 42,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்ட போதிலும், அதன் பின்னர் வருடாந்தம் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்யும் பட்டதாரிகளுக்கு சீராக வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான திட்டம் தயாரிக்கப்படவில்லை.

மேலும் 2004 - 2012 வரையான 8 வருடகாலத்தில் இடம்பெற்ற தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னர் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா கற்கையைப் பூர்த்திசெய்த 52,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

அப்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் தொடர்ச்சியான போராட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக 2012 ஆம் ஆண்டில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டாலும், அரசசேவையில் அவர்கள் முறையான விதத்தில் உள்வாங்கப்படவில்லை.

மேலும் 2012 இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் நிரந்தர நியமனம்பெற்று 8 வருடங்களாகியுள்ள போதிலும், அரசசேவை பட்டியலில் அவர்களது பெயர்கள் இன்னமும் உள்வாங்கப்படவில்லை.

கடந்த 2020 பெப்ரவரி 5 ஆம் திகதி, வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா கற்றைநெறியைப் பூர்த்திசெய்தவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தல் என்ற தலைப்பில் உங்களால் அமைச்சரவையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுது.

அதற்கமைய விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டது. அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் 12 இல் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டன. முதலில் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாகவே விண்ணப்பப்படிவங்கள் கோரப்பட்டன.

அதற்குரிய நியமனம் கடந்த மார்ச் 2 ஆம் திகதி வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜனாதிபதியினால் பொதுத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்தல்கள் ஆணைக்குழு அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி, பொதுத்தேர்தல் முடிவடையும் வரையில் நியமனங்கள் வழங்குவதை இடைநிறுத்தியது.

பொதுத்தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட நியமனங்கள் அனைத்தையும் இல்லாமல்செய்து, மீண்டும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகள் கடந்த 2020 செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

அதுமாத்திரமன்றி கடந்த செப்டெம்பர் மாதம் தொழில் நியமனங்கள் வழங்கப்பட்டபோது, சுமர்ர் பத்தாயிரம் பட்டதாரிகள் தனியார் துறையில் பணியாற்றுவதாக எவ்வித அடிப்படைகளுமின்றி நியாயமற்ற விதத்தில்கூறி, அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு மறுப்புத்தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பாரிய எதிர்ப்பலையொன்று உருவானதைத்தொடர்ந்து அந்த வேலையில்லாப்பட்டதாரிகளுக்கு மீண்டும் வேலைவாய்ப்பை வழங்கவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.

எனவே ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி கடந்த பெப்ரவரி மாதம் (2021) பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்திசெய்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு 3 தடவைகள் விண்ணப்பங்கள் கோரப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி இதுவரையில் அரசசேவையில் உள்வாங்கப்பட்டிருக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா கற்றைநெறியைப் பூர்த்திசெய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52,589 ஆகும்.

எனினும் நீங்கள் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையின்போது 65,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டீர்கள். அது முற்றிலும் பொய்யான தகவலாகும்.

அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனையின் கீழ் 60,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அதனைப் பூர்த்திசெய்வதற்கு இன்னும் 7411 பேருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

ஏற்கனவே அரசசேவையில் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சிக்காலம் 2021 செப்டெம்பர் 2 ஆம் திகதிவரையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி அவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே அந்தப் பட்டதாரிகளை இப்போது பணிபுரியும் நிறுவனங்களிலேயே நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேவேளை தற்போது பணியாற்றும் நிறுவனங்களில் நிரந்தர நியமனத்தைப்பெற விரும்பாதவர்கள், வேறு நிறுவனங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். எனவே இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியாகிய நீங்கள் அவதானம் செலுத்தி, புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட அனைத்துப் பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right