எம்.எஸ்.தீன்

இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு யாருமில்லை என்ற நிலையே உருவாகிக் கொண்டிருக்கின்றது. காலத்திற்கு காலம் ஆட்சி அமைத்துக் கொண்ட அரசாங்கங்களுடன் முஸ்லிம் கட்சிகள் இணைந்து செயற்பட்டு வந்துள்ளன. 

இதன்போதெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியூதீன் ஆகியோர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்தும், பௌத்த இனவாத நெருக்குதல் பற்றியும் குரல் கொடுத்துள்ளார்கள்.

இப்போது முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அடிச்சுவட்டை பின்பற்றும் எதிர்க்கட்சியிலுள்ள ஆளுந்தரப்பினராகியுள்ளார்கள். இதனால், இக்கட்சிகளின் தலைவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுகின்றார்கள். 

ரிஷாத் பதியூதீன், அஸாத்சாலி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முஸ்லிம் தலைவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு கடிவாளம் போடப்பட்டுள்ளதாகவே உள்ளது. முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் வெறும் வாய் சொல் வீரர்களாகவே இருந்தார்கள்.

இப்போது வாய் சொல் வீரர் என்ற நிலையையும் கடந்து வாய் பேச முடியாத ஊமை வீரர்களாகியுள்ளார்கள். அரசாங்கத்தின் தத்தெடுத்த பிள்ளைகளாக உள்ள முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களின் கைது குறித்தோ, அரசியல் தலைவர்களின் கைது குறித்தோ அரசாங்கத்துடன் பேசியுள்ளதாக எந்தத் தகவல்களுமில்லை.

இதேவேளை, மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உள்ளார்கள். இவர்களில் எவரும் தமது தலைவரின் கைது குறித்தோ, அவரை விடுதலை செய்ய வேண்டுமென்றோ பாராளுமன்றத்தில் பேசவில்லை. 

கட்சியின் தலைவருக்காக பேச முடியாத பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியை விட்டும் நீக்காது, கட்சியின் உறுப்பினர்களாக வைத்திருப்பதன் நோக்கம் என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை. அதேவேளை,  ரவூப் ஹக்கீம் பாராளுமன்ற அமர்வுகளில் அடிக்கடி ரிஷாத் பதியூதீனை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுள்ளார். 

ஹக்கீமைப் பொறுத்தவரையில் ரிஷாத்தின் விடுதலையை வலியுறுத்த வேண்டியது அரசியலுக்கு அப்பால் செய்நன்றிக்கடனும் கூட. நீதி அமைச்சராகவுள்ள அலி சப்ரி முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டுள்ள போதிலும், தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினராக உள்ள அவரினால் தடைகளை தாண்ட முடியாத நிலையே உள்ளது. அவர் கூரிய கத்தியின் மேலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றார். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-27#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.