என்.கண்ணன்

பண்டிகைக் காலங்களில் சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்வது இலங்கையில் நீண்டகாலமாகவே நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம். 

சித்திரைப் புத்தாண்டுக்கு, நத்தாருக்கு, வெசாக் அல்லது பொசன் பௌர்ணமியின்போது, இவ்வாறு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுகிறது.

மன்னிப்பு அளிக்கப்படும்போது, பெரும்பாலும் சிறுகுற்றங்களுக்காக தண்டனை அனுபவிப்பவர்கள், அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்படும்.

இந்தமுறை பொசன் பௌர்ணமியை முன்னிட்டு, 93 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலையை, அரசாங்கம் வழக்கத்துக்கு மாறான நோக்கத்துக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

நீண்டகாலமாக சிறையில் இருந்த 16 அரசியல் கைதிகளுடன், மரணதண்டனைக் குற்றவாளியான துமிந்த சில்வாவும், விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். விடுதலையான ஏனையவர்கள், சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.

துமிந்த சில்வா மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை அரசாங்கத்தினால் மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நகர்வு. தமிழ் அரசியல் கைதிகளை மன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு புத்தாண்டு, நத்தார், வெசாக் என்று பண்டிகைகள் வரும் போதெல்லாம், அவர்களின் உறவினர்களும், அரசியல் கட்சிகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். அப்போதெல்லாம் செவிசாய்க்காத ஆட்சியாளர்கள் முதல் முறையாக 16 அரசியல் கைதிகளை பொசன் பௌர்ணமியை முன்னிட்டு விடுவித்திருக்கிறார்கள். 

இது, அரசியல் கைதிகளை விடுவித்து இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அவ்வாறான முடிவை அரசாங்கம் எடுத்திருந்தால், ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும், அரசாங்கம் தீர்க்கமானதொரு முடிவை எடுத்திருக்கும்.

ஆனால் அரசாங்கம் இந்த முறை பொசன் பொதுமன்னிப்பில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு எடுத்த முடிவுக்கு இரட்டைக் காரணங்கள் இருந்தன.

ஒரே கல்லில் இரண்டு காய்களை வீழ்த்துவதற்காக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தான் இது.

ஒன்று, சர்வதேச அழுத்தங்களைக் குறைத்துக் கொள்வது. இரண்டாவது, ஆளும்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்வது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-27#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.