(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்திற்கு நாட்டு மக்களை பாதுகாத்து நாட்டை நிர்வகிக்க முடியவில்லை எனில், அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. எனவே கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை எனில் பதவி விலகுமாறு எதிர்க்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதியின்  உரை தொடர்பில் கருத்து வெளியிடும் போது, இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவதாக தெரிவித்த போது 6 முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வினை அவரிடம் கோரியிருந்தோம். எனினும் இவற்றில் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வினை ஜனாதிபதி வழங்கவில்லை. இந்த பிரச்சினைகளை மறைத்து நாட்டு மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்க முடியாது.

மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை பார்க்கும் போது மனசாட்சி உறுத்தவில்லையா என்று ஜனாதிபதியிடமும் அவர் தலைமையிலான அரசாங்கத்திடமும் கேள்வியெழுப்ப விரும்புகின்றேன். எரிபொருள் விலையை குறைக்குமாறு மீண்டும் மீண்டும் கோருகின்றேன். அதே போன்று விவசாயிகளுக்கு உரத்தை வழங்குங்கள். பேர்ள் கப்பல் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈட்டை வழங்குங்கள். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நஷ்டஈட்டை வழங்குங்கள்.

இலங்கைக்கு சுமார் 36 இலட்சம் டொலரை இடைக்கால இழப்பீடாக வழங்குவதாக பேர்ள் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்திய கப்பல் நிறுவனமா இழப்பீட்டை தீர்மானிக்கும்? இது என்ன கேலிக்கூத்து? இந்த நாட்டில் அரசாங்கமொன்று இருக்கிறதா?

இது மாத்திரமின்றி இணையவழி கல்வி, கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம், கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் என்பவற்றை முறையான திட்டமிடலுடன் முன்னெடுக்குமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அசேல சம்பத் கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர் மிகவும் வேதனையடைந்துள்ளனர். நாட்டு மக்களை இவ்வாறு தான் நடத்துவதா? ஒரு புறம் அசேல கைது செய்யப்படுகிறார். மறுபுறம் சீன இராணுவ உடையணிந்தவர்கள் வாவி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த அரசாங்கத்திற்கு நாட்டு மக்களை பாதுகாத்து நாட்டை நிர்வகிக்க முடியவில்லை எனில், அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. எனவே கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை எனில் பதவி விலகுங்கள் என்றார்.