(எம்.மனோசித்ரா)

இணையவழி கல்வியினால் மாணவர்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை ஜனாதிபதி அறியாமல் உள்ளார். மாணவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை உணராததால் தான் இணையவழி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது என்று தனது விசேட உரையில் ஜனாதிபதி கூறினார் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ராஜபக்ஷாக்களின் பிள்ளைகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல் நகரில் உயர்கல்வியை கற்றுள்ளதால் இலங்கையிலுள்ள மாணவர்கள் இணையவழி கல்வியால் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை இவர்களால் உணர முடியாது. அதனால் தான் இலங்கையில் இணையவழி கல்வி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி பகிரங்கமாக பொய் கூறுகின்றார்.

உண்மையில் இது அவருடைய தவறல்ல. அவருக்கு இந்த தகவல்களை வழங்கிய அதிகாரிகள் நாட்டு தலைவரின் கௌரவத்தை பாதுகாக்க தவறியுள்ளனர். தற்போது ராஜபக்ஷாக்கள் பின்பற்றும் இந்த கல்வி கொள்கை நாம் கல்வி கற்ற காலத்தில் பின்பற்றப்பட்டிருந்தால், கிராமத்தில் பிறந்த என்னால் பொறியியலாளராகியிருக்க முடியாது.

இவர்களால் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வறுமையான மாணவர்கள் வீதிகளில் கைவிடப்பட்டுள்ளார்கள். இதனால் இவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. காரணம் இவர்கள் ஓய்வு காலத்தில் அமெரிக்காவிற்கு சென்று குடியேறிவிடுவார்கள். ஆனால் எமக்கும் எமது சந்ததியினருக்குமே இலங்கை ஒரு மனித பாலைவனமாகிவிடும் என்றார்.