(எம்.ஆர்.எம்.வஸீம்)

வடக்குக்கு விஜயம்செய்யும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தை வடக்கு முதலமைச்சர் சந்திப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். வடக்குக்கு விஜயம்  செய்யும் ராஜதந்திரிகள் வடமாகாண முதலமைச்சரை சந்திப்பது சம்பிரதாயம். அதனை அரசாங்கம் மாற்றக்கூடாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று (31) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டில் நல்லிணக்கம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஏற்பட்டுக்கொண்டு செல்லும் நிலையில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் இலங்கைக்கு வந்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை அவதானித்துச்செல்லவே அவர் வந்துள்ளார். அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மதிக்கும் வகையில் சர்வதேச தலைவர்கள் நாட்டுக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். அதேபோன்று அவர்களது நாட்டுக்கு வருமாறு எமது தலைவர்களுக்கும் அழைப்புவிடுக்கின்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இந்த நிலையை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அத்துடன் அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெறாது தடுக்கவேண்டியது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கடமையாகும்.

மேலும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான்கிமூன் வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது வடக்கில் ஆளுனர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்க இருக்கின்றார். ஆனால் அவர் வடக்கு முதலமைச்சரை சந்திக்கமாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த செயற்பாடு சம்பிரதாயத்துக்கு முரணாகும். ஏனெனில் வெளிநாட்டு ராஜதந்திரி ஒருவர் வடக்குக்கு சென்றால் அவர் ஆளுனர், முதலமைச்சர் ஆகியோரை சந்திப்பதுதான் வழமை. ஆனால் பான்கிமூன் வடமாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்க வில்லையென தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் வடக்கு முதலமைச்சர் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.