ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்திற்கு வருகை தந்து பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சபையில் எதிர்க்கட்சியின் முன்வரிசையில் உள்ள 13 ஆவது இலக்க இருக்கையில் ரணில் அமர்ந்து கொண்டார்.  அவருக்கு சம்பந்தனின் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்ததோடு மனோ கணேசன் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து அவர் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையை ஆற்றினார். நாட்டின் பொருளாதார நிலைமைகள், எதிர்கால அச்சங்கள், அதற்கான தீர்வுகள் சிலவற்றை முன்வைத்து அவருடைய உரை மிகவும் துல்லியமாக அமைந்திருந்தது.

இந்த உரைக்கு ஆளும், எதிர்த் தரப்பிலிருந்து பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி அனைத்துமொழி உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களிலும் சிறு இடைவெளிக்குப் பின்னர் ரணிலின் உரைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.


பாராளுமன்ற உறுப்பினரானதன் பின்னர் அவர் நாரஹேன்பிட்டவிலுள்ள அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். இச்சமயத்தில் தேரரும், ரணிலும் கலந்துரையடலிலும் ஈடுபட்டனர். அண்மைக்காலமாக தேரர் அரசாங்கத்தினை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் ரணிலுடனான கலந்துரையாடல் தீர்க்கமானதொன்றாகவே கருதப்படுகின்றது.

இவ்வாறிருக்க, ரணிலின் பாராளுமன்ற வருகை மற்றும் அவரது உரையை திட்டமிட்டு மழுங்கடிக்கும் நோக்கிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் திட்டமொன்று வகுக்கப்பட்டது.

அதாவது, வழமையாக பாராளுமன்ற வளாகத்தில் அறை இலக்கம் இரண்டில் தனது கூட்டங்களை நடத்தும் சஜித் பிரேமதாச கடந்த புதன்கிழமை காலை ஒன்பதரை மணி அளவில் வழமைக்கு மாறாக தனது அலுவலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்திருந்தார். சுமார் 29 உறுப்பினர்கள் வரையில் தான் அங்கு சென்றிருந்தனர்.

அங்கு சென்றவர்களிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,  ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுதை பொருட்டாக கொள்ளாதிருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கு ஏதாவது ஆலோசனைகளை வழங்குங்கள் என்ற தொனிப்பட உரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.

அச்சமயத்தில் அங்கு பிரசன்னமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் நளின் பண்டார உள்ளிட்ட இரண்டு உறுப்பினர்கள் சபை நடுவே எரிபொருள் விலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்தலாம் என்று யோசனை முன்வைத்திருக்கின்றனர்.

அவ்வாறு ஆர்ப்பாட்டத்தினை நடத்துகின்றபோது, ரணில் விக்கிரமசிங்கவின் உரை மீதான கவனம் சிதறி ஆர்ப்பாட்டத்தின் மீது குவியும். அதன் காரணமாக ரணில் உரை முக்கியத்துவமற்றதாக போய்விடும் என்று கணக்குப் போட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி ரணில் உரையாற்றும் போதும் சரி அதன் பின்னரும் சரி அவரது உரை தொடர்பான பாராட்டுக்களை வெளியிட வேண்டாம் என்றும் ரணில் உரை நிறைவடைந்த பின்னர் அவருடைய உரையை எவரும் மேற்கோள் காட்டக்கூடாது என்றும் அங்கிருந்த உறுப்பினர்களுக்கு சஜித் அறிவுறுத்தியிருக்கின்றார்.

இந்த திட்டத்திற்கு அமையவே கடந்த புதனன்று பாராளுமன்றத்தின் சபை நடுவே எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  எனினும் ஆர்ப்பாட்டத்தால் அடைய நினைத்த இலக்கை எட்டியிருக்க முடியாது ஒரு கட்டத்தில் அதனை முடித்துக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டு விட்டது.

ஆர்ப்பாட்டம் நிறைவடையும் வரையில் பொறுமையாக இருந்த ரணில் தனது உரையை நிகழ்த்தினார். அவருடைய உரையைத்தொடர்ந்து ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹஷீம் உரையாற்றினார். ஐக்கிய தேசியக் கட்சியில் தவிசாளராகவும், ரணிலுக்கு நெருக்கமாகவும் இருந்தவர். ஆனால் சஜித்தின் அறிவுத்தலால் ரணிலுக்கு அடுத்ததாக உரையாற்றுகின்றேன் என்ற சம்பிரதாயத்தினைக் கூட வெளிப்படுத்தாது உரையை ஆரம்பித்து நிறைவு செய்திருந்தார்.

எவ்வாறாயினும், அரசியலில் சிரேஷ்ட தலைவராக இருக்கும் ரணிலின் உரைக்கு இவ்விதமான திட்டங்களை வகுத்துச் செயற்படுவது முறையல்ல என்று ..சக்தியின் முக்கிஸ்தர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமன்றி, ஆர்ப்பாட்டத்தால் சபையை குழப்ப முனைந்த ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டத்தினை பிரதமர் மஹிந்த இலாவகமாக உடைத்தெறிந்திருந்தார்.

அவர் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் ரணில் உரையாற்றி முடியும் வரையில் சபையில் அமர்ந்திருந்து ஆளும் தரப்பு உறுப்பினர்களை 'கட்டுக்குள்' வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-27#page-5

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
https://bookshelf.encl.lk/.