(செ.தேன்மொழி)
முகப்புத்தகம் (பேஸ்புக்) ஊடாக தன்னை அவமதித்த இருவரை கடத்திச் சென்று சிலுவையில் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மாந்திரீகர் தலைமறைவாகியுள்ள நிலையில் விசாரணைகளை பலகொல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கண்டி - பலகொல்ல பகுதியில், நேற்று முன்தினம் 25 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகப்புத்தகம் ஊடாக தன்னை அவமதித்தமை தொடர்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான 30 வயதுடைய துஷ்மந்த என்ற மாந்திரீகர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அம்பிட்டிய மற்றும் மேலும் சில பகுதிகளில் மாந்திரீக நிலையங்களை நடாத்தி வந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபரை முக புத்தகத்தில் அவமதித்து பதிவுகளை வெளியிட்ட அவரது நண்பர்கள் இருவரை அம்பிட்டிய பகுதிக்கு அழைத்து சென்று  இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளார்.  மரக்கட்டைகளினாலான சிலுவையில் இருவரையும் அறைந்துள்ளார்.

சம்பவத்தில் பொல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரும் , கடுவெல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிருவரும் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

எவ்வாறாயினும் பிரதான சந்தேக நபர் அந்த பகுதியிலிருந்து தப்பி சென்று தலைமறைவாகியுள்ளதுடன் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.