ஐ.சி.சி டி-20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இல் தொடங்க உள்ளது. 

16 அணிகள் பங்குகொள்ளும் இத் தொடரின் இறுதிப் போட்டியானது நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும்.

2021 இந்தியன் பிரீமியர் லீக்கின் எஞ்சிய போட்டிகள் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று முடிந்த பின்னர் சில நாட்களில் டி-20 உலகக் கிண்ணம் ஆரம்பமாகும்.

2021 ஆம் ஆண்டுக்கான டி-20 உலகக் கிண்ணம் இந்தியாவில் நடத்தப்படவிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றுவது குறித்து பி.சி.சி.ஐ இன்னும் ஐ.சி.சி.க்கு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்புகளையும் வழங்கவில்லை.

டி-20 உலக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஓமானில் போட்டிகள் நடைபெறும்.

முதல் சுற்று ;

இதில் 12 போட்டிகள் அடங்கும், இதில் எட்டு அணிகள் இருக்கும், அதில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடித்த நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.

அதன்படி பங்களாதேஷ், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமான், பப்புவா நியூ கினியா ஆகிய எட்டு அணிகளில் இருந்து நான்கு அணிகள் பின்னர் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி, தரவரிசையில் முதல் எட்டு இடங்களை பிடித்த அணியுடன் இணைந்து கொள்ளும்.

சூப்பர் 12 சுற்று ;

இது 30 போட்டிகளை உள்ளடக்கியது. சூப்பர் 12 சுற்று ஆட்டஙகள் ஒக்டோபர் 24 ஆம் திகத ஆரம்பமாகும்.  சூப்பர் 12 சுற்றில் கலந்து கொள்ளும் அணிகள் தலா ஆறு அணிகளை உள்ளடக்கிய வகையில் இரு குழுக்களாக பிரிக்கப்படும்.

இந்த சுற்றுக்கான ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும்.

இதைத் தொடர்ந்து மூன்று பிளேஆப் ஆட்டங்களும் இரண்டு அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளும் நடைபெறும்.

டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியுமா என்பது குறித்த இறுதி அறிவிப்பினை ஜூன் இறுதிக்குள் வழங்குவதற்கு ஐ.சி.சி., பி.சி.சி.க்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.

கொவிட் -19 தொற்றுநோய் கடந்த ஆண்டு உலகளாவிய கிரிக்கெட் நாட்காட்டியினை சீர்குலைத்ததால், 2020 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.