(செ.தேன்மொழி)

பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி மக்களது கருத்து சுதந்திரம் மற்றும் முற்போக்கான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் சட்டதரணி சேனக்க பெரேரா குற்றஞ்சாட்டினார்.

சர்வதேச சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை வெலிக்கடையிலுள்ள சிறைச்சாலைகள் தலைமையகத்தின் முன்னால் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பினரால் அடையாள போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் , இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குற்ஞ்சாட்டினார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டிருந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கு என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் சுற்றிவளைப்புக்காக அழைத்துச் சென்றதாக தெரிவித்து பலர் கொல்லப்பட்டிருந்தனர். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இது அனைவரும் அறிந்ததே.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி மக்களின் கருத்து சுதந்திரம் மற்றும் முற்போக்கான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியிருந்தார். ஆனால் அவர்கள் அனைவருமே விரைவில் விடுதலைச் செய்யப்படவிருந்தவர்களே, அவர்களை விடுதலை செய்துவிட்டு சர்வதேசத்திடம் நற்பெயரை பெற்றுக் கொள்ளமுயற்சித்து வருகின்றார்.

மேலும் 15-20 வருடகாலமாக பல கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால் மரண தண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வவை ஐந்து வருடங்களுக்குள் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

இதன்போது சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா கூறியதாவது,

தற்போதைய ஜனாதிபதி மக்களுக்கான ஜனாதிபதி அல்ல மிரிசுவில் கொலை குற்றவாளியான முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க மற்றும் மரதண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோரின் ஜனாதிபதி ஆவார்.

அதன் காரணமாகவே அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் ஆர்வமாக செயற்பட்டுள்ளார். இதேவேளை துமிந்த சில்வாவுடன் அதே குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.

பல வருடகாலமாக சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளை பற்றி எண்ணாது , துமிந்த சில்வாவுக்கு மாத்திரம் பொது மன்னிப்பு வழங்குவதற்கான காரணம் என்ன ? அவரை மாத்திரமா மனிதராக எண்ணுவீர்கள். ஏனைய கைதிகளை பற்றி சிந்தித்து பார்க்க மாட்டீர்களா? இன்று கைதிகள் சிறைச்சாலைகளுக்குள் சித்திரவதைக்குள்ளாகி வருகின்றனர். பொலிஸாரின் பாதுகாப்பில் இருக்கும் போதும் பல கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.இவற்றை தடுப்பதற்காக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.