(ஆர்.ராம்)
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்குச் செல்வதா இல்லையா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்.

 இதுவரையில் அவ்விதமாக கலந்துரையாடல்கள் எதுவுமே கட்யினுள் இடம்பெறவில்லை என்று பொதுஜன பெரமுனவின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.

பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ள நிலையில், அவர் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவம் செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக வெளியாகிக்கொண்டிருக்கும் தகவல்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பஷில் ராஜபக்ஷ எமது கட்சியின் ஸ்தாபகத்தலைவர். அவர் அரசியல் சிரேஷ்டத்துவமும் கொண்டவர். அவர் ஆட்சியை அமைப்பதற்காக மேம்பட்ட பணியை ஆற்றியுள்ளார்.

அவ்விதமானவர் பாராளுமன்றத்திற்கு செல்வது தொடர்பில் இதுவரையில் எம்முடன் எவ்விதமான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை. அவர் பாராளுமன்றம் செல்லும் தீர்மானமொன்றை எடுப்பாராயின் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் இந்த விடயத்தில் அவரே தீர்மானம் எடுக்க வேண்டியவராக உள்ளார்.

இதேவேளை, வெவ்வேறு விதமான ஊடகங்களில் திரிபுப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

அவை அனைத்துமே உத்தியோகப்பற்றற்றதும் உறுதியற்றதுமானவை ஆகும் என்றார்.