முடிவுக்கு வருமா ? 30 ஆண்டுகால சிறை

By Gayathri

26 Jun, 2021 | 02:14 PM
image

19 வயதில் கைது செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்ட பேர­றி­வாளன், இன்று 50 வயதை நெருங்­கி­ விட்டார். திரும்பப் பெற­மு­டி­யாத தன்­னு­டைய இள­மையை ஒட்­டு­மொத்­த­மாக இழந்து, வாழ்­நாளில் பாதிக்கும் மேலான காலத்தைச் சிறையில் கழித்­தி­ருக்­கிறார். அவ­ரது விடு­த­லைக்­கான குரல்கள் தற்­போது ஓங்கி ஒலித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன.

அ.தி.மு.க.வின் பத்­தாண்டு ஆட்­சியில் அவரை விடு­தலை செய்­வ­தற்­கான வாய்ப்­புகள் இருந்தும் தவ­ற­வி­டப்­பட்­டன. ஆனால், தற்­போ­தைய முதல்வர் ஸ்டாலின் தலை­மை­யி­லான தி.மு.க. அரசு அதனை விரைவுப்படுத்தும் என்ற நம்­பிக்கை அனை­வ­ரது மன­திலும் துளிர் விடு­கின்­றது.

இந்­திய பிர­த­ம­ராக இருந்த ராஜீவ் காந்தி கொலை செய்­யப்­பட்­டது மிக பெரிய துன்­பியல் சம்­பவம். இதற்குக் கார­ண­மா­ன­வர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்­பது சரி­யா­னதே. ஆனால் அதில் பெரிதும் தொடர்புப்படா­தவர்  என்ற கருத்து பேர­றி­வாளன் மீது உள்­ள­மை­யா­லேயே அவ­ரது விடு­த­லைக்­கான குரல்கள் அதிகம் ஒலிக்­கின்­றன. அந்த பயங்­க­ர­மான சம்­பவம் எந்த அர­சியல் பின்­ன­ணியும்  செல்­வாக்கும் இல்­லாத ஒரு சாமா­னிய இளை­ஞ­னான பேர­றி­வா­ளனின் வாழ்க்­கையை பயங்­க­ர­மாக தாக்­கி­யது.

'சிறு விசா­ரணை' என்று பேர­றி­வாளன் அழைத்து செல்­லப்­பட்டு நேற்று முன்தினத்தோடு30 ஆண்­டுகள் முடிந்து விட்­டன. இரண்டு சிறிய 9 வோல்ட் மின்­க­லங்கள் வாங்கிக் கொடுத்­த­தற்­காக  பேர­றி­வா­ள­னுக்கு மரண தண்­டனை தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு 25 ஆண்­டுகள் ஆகின்­றன.  தனது விடு­த­லைக்­காக பேர­றி­வாளன் போராடி வரு­கின்றார். உண்­மையில் பேர­றி­வாளன் போரா­டினார் என்­ப­தனை விட அவ­ர­து­ தாயார் போராடி வரு­கின்றார் என்­பதே உண்மை.

1991 இல் ராஜீவ் கொலை இந்திய நாட்டின் பாது­காப்புக் குறித்து சந்­தே­கங்­களைத் தோற்­று­வித்த நிலையில் அதை உறு­திப்­ப­டுத்த பல கைது நட­வ­டிக்­கைகள் செய்­யப்­பட்­டன. சி.பி.ஐ யால் கைது செய்­யப்­பட்ட நூற்­றுக்­க­ணக்­கான  விடு­தலை புலி­களின் ஆத­ர­வா­ளர்­க­ளி­டையே பேர­றி­வா­ளனும் இருந்தார். 

அவர்­களில் 41 பேரின் மீது பூந்­த­மல்­லியில் பயங்­க­ர­வாதத் தடுப்பு சட்­டத்தின் கீழ் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்­தது. இந்த அர­சியல் படு­கொ­லைக்கு முழுக்க விடு­தலைப் புலி­கள்தான் காரணம் என்று சி.பி.ஐ. குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­தது. வழக்கு தொடங்கும் முன்பே குற்­றஞ்­சாட்­டப்­பட்ட 12 பேர்கள் இறந்­து­விட மீதி இருந்த 26  பேர்­க­ளுக்கு 1998 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 28 ஆம் திகதி மரண தண்­டனை விதித்து, விசா­ரணை நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. சிவ­ரா­ச­னுக்கு மின்­க­லங்கள் (பேட்­டரி) வாங்கிக் கொடுத்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்டு பேர­றி­வா­ள­னுக்கும் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

2011 ஆம் ஆண்டு இவ­ருக்கு தூக்­குத்­தண்­டனை முடிவு செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் பேர­றி­வாளன் மற்றும் சிலர் அதை நிறுத்­து­வ­தற்கு உயர்­நீ­தி­மன்­றத்தில் முறை­யீடு செய்­தார்கள். ராம் ஜெத்­ம­லா­னியும் கொலின் கோன்­சால்சும் அவர்­க­ளுக்­காக வாதிட்­டனர். தூக்­குத்­தண்­டனை நிறுத்­தப்­பட்­ட­துடன் உச்­ச­நீ­தி­மன்றம் அதை ஆயுள் தண்­ட­னை­யாக மாற்­றி­யது.

இதேவேளை, சிவ­ரா­ச­னுக்கு மின்­க­லங்கள் வாங்­கிக்­கொ­டுத்­ததை ஒப்­புக்­கொண்ட பேர­றி­வாளன், அதன் பயன்­பாடு குறித்தும் ராஜீவ் காந்­தியின் படு­கொலை குறித்தும் தனக்கு ஏதும் தெரி­யாது என்று  தனது ஒப்­புதல் வாக்­கு­ மூ­லத்தில் தெரி­வித்­துள்ளார்.  பேர­றி­வா­ளனின் வாக்­கு­மூ­லத்தில் ஒரு பாதியை மட்­டுமே பதிவு செய்­த­தா­கவும் மீதியை விட்­டு­விட்­ட­தா­கவும் புல­னாய்வு அதி­கா­ரி­யான தியா­க­ராஜன் உச்­ச­நீ­தி­மன்­றத்தில் ஒப்­புக்­கொண்டார்.

பேர­றி­வா­ளனின் பங்கு குறித்து சி.பி.ஐ க்கு சரி­யாகத் தெரி­ய­வில்லை. ஆனால் சதியில் அவ­ருக்கு தொடர்­பில்லை என்­பது ராஜீவ் கொலை விசா­ர­ணையின் அடுத்­த­டுத்த கட்­டங்­களில் உறு­தி­யா­னது என்று தியா­க­ராஜன் கூறி­ய­தாக 'தி ஹிந்து' பத்­தி­ரிகை தெரி­வித்­தது. 

சுபா, தாணு மற்றும் தன்னைத் தவிர வேறு யாருக்கும் இந்த விடயம் தெரி­யாது என்று 1991 ஆம் ஆண்டு மே 7 ஆம் திகதி புலி­களின் முக்­கிய பொறுப்பில் இருந்த பொட்டு அம்­ம­னுக்கு சிவ­ராசன் அனுப்­பிய தந்தித் தக­வலை சான்­றாக அவர் கூறினார். வெறு­மனே மின்­க­லங்­களை வாங்கிக் கொடுத்­தது ராஜீவ் கொலை சதிக்­குற்­றத்தில் ஈடு­பட்­ட­தாக ஆகாது என்று அவர் மேலும் கூறி­யி­ருந்தார். சதியில் பேர­றி­வா­ள­னுக்கு தொடர்­பில்லை என்­ப­தற்கு அந்த தந்­தியே சாட்­சி­யாக இருக்­கி­றது.

பணி­யி­லி­ருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்கள் ஆகி­விட்­டதால் பேர­றி­வா­ள­னுக்­காக தியா­க­ராஜன் அளித்த வாக்­கு­மூ­லத்தை உச்­ச­நீ­தி­மன்றம் ஏற்க மறுத்­து­விட்­டது. இது ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது. இன்னும் முடி­யாமல் இருக்கும். ஒரு வழக்கைப் பொறுத்­த­மட்டில் புல­னாய்வு செய்த அதி­கா­ரியின் வாக்­கு­மூலம் இன்னும் ஏற்­கத்­தக்­கதே. அவர் அலு­வ­ல­கத்தில் இருக்­கி­றாரா? அல்­லது ஓய்வு பெற்று விட்­டாரா? என்­பது தேவை­யில்­லாத விடயம். இரண்டு பத்­தாண்­டு­க­ளாக பல்­வேறு கட்­டங்­களில் இழுத்­துக்­கொண்­டி­ருக்கும் இந்த வழக்கில் தியா­க­ரா­ஜனின் வாக்­கு­மூ­லத்தை நிரா­க­ரிப்­பது முறை­யல்ல என்­கின்­றனர் இந்த வழக்­கினை தொடர்ந்து கவ­னித்து வரு­ப­வர்கள்.

பேர­றி­வாளன் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளித்த நீதி­ப­தி­களில் ஒரு­வ­ரான கே.டி.ஜோசப் 2017 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 18 ஆம் திகதி சோனியா காந்­திக்கு எழு­திய ஒரு கடி­தத்தில் இந்த சி.பி.ஐ வழக்கு விசா­ரணை இந்­தியக் குற்­ற­வியல் நீதி முறையின் மன்­னிக்க முடி­யாத ஒரு குறை­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­ருப்­ப­தாக குறிப்­பி­டு­கிறார்.

இந்­நி­லையில் முன்னாள் தமிழக  முதல்வர் ஜெய­ல­லிதா மாநில அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி ஏழு கைதி­க­ளையும் விடு­தலை செய்யப் போவதாய் அறி­வித்தார். ஆனால் அந்த வாய்ப்பு தவ­றி­யது. எடப்­பாடி ஆட்­சியில் விடு­தலை சாத்­தி­ய­மாகும்  என எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும் அது கிட்­ட­வில்லை. தற்­போது தி.மு.க. ஆட்­சியில் அவ­ரது  சிறை­வாசம் 31ஆவது ஆண்டை எட்­டி­யி­ருக்கும் இந்தச் சூழலில், அவ­ரது நிரந்­தர விடு­த­லைக்­கான குரல்கள் மேலும் வலுப்­பெற்­றி­ருக்­கின்­றன.

ஸ்டாலின் தமி­ழக முதல்­வ­ராக பத­வி­யேற்ற பின்னர் குடி­ய­ரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்­துக்கு எழு­தி­யுள்ள கடி­தத்தில் “பேர­றி­வாளன், நளினி உள்­ளிட்ட 7 பேரும் 30 ஆண்­டு­க­ளாக சிறையில் வாடு­கின்­றனர். ஏழு பேர் விடு­தலை குறித்து தமி­ழக அரசு கடந்த 9/9/2018 ஆம் ஆண்டு நிறை­வேற்­றிய தீர்­மா­னத்தை ஏற்று விடு­விக்­க­வேண்டும்” என்று குறிப்­பிட்­டுள்ளார். அவர் எழு­திய கடி­தத்தை குடி­ய­ரசுத் தலைவர் மாளிகை அலு­வ­ல­கத்தில் நேரில் அளித்தார் டி.ஆர் பாலு.  

இந்­நி­லையில்  தற்­போது அனை­வ­ரது எதிர்­பார்ப்பும் பேர­றி­வாளன்  விடு­தலை மீது திரும்­பி­யுள்­ளது. ஒரு தலை­முறைக் காலம் சிறையில் கழித்­து­விட்டு, திரும்பப் பெற­மு­டி­யாத தன்­னு­டைய இள­மையை இழந்­து­விட்ட பேர­றி­வாளன் உள்­ளிட்ட 7 தமி­ழர்­களின் விடு­த­லைக்­காகப் பேர­றி­வா­ளனின் தாயார் அற்­பு­தம்மாள் தொடங்கி பல்­வேறு தரப்­பினர் தொடர்ந்து போரா­டியும், குரல் எழுப்பிக் கொண்டும் இருக்கும் நிலையில், பேர­றி­வா­ளனின் சிறை­வாசம் 31ஆம் ஆண்டை எட்­டி­யி­ருப்­பது, இப்­பி­ரச்­னையில் மேல­திக கவ­னத்தை இப்­போது ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்­பாக பேர­றி­வா­ள­னிடம் விசா­ரணை நடத்த வேண்டும், விசா­ரணை முடிந்து நாளை காலை அனுப்பி வைக்­கப்­பட்­டு­வி­டுவார் என்று, 30 ஆண்­டு­க­ளுக்கு முன்பு அதா­வது, 1991 ஜூன் 11 அன்று இரவு சி.பி.ஐ. யின் சிறப்புப் புல­னாய்வு பிரிவு அதி­கா­ரிகள் பேர­றி­வா­ளனின் பெற்­றோ­ரிடம் கூறி அழைத்­துச்­சென்­றி­ருக்­கி­றார்கள். 

தங்கள் மகன் எந்தத் தவறும் செய்­ய­வில்லை என்­பதால், அதி­கா­ரி­களின் கூற்றை நம்பி, பேர­றி­வா­ளனை விசா­ர­ணைக்கு அனுப்­பி­வைத்­தனர். ஆனால், தங்கள் மகன் நாளை காலை திரும்பப் போவ­தில்லை என்­பதை அப்­போது அவர்கள் அறிந்­தி­ருக்­க­வில்லை!

19 வயதில் கைது செய்­யப்­பட்டுச் சிறை­யி­ல­டைக்­கப்­பட்ட பேர­றி­வாளன், இன்று 50 வயதை நெருங்­கி ­விட்டார். திரும்பப் பெற­மு­டி­யாத தன்­னு­டைய இள­மையை ஒட்­டு­மொத்­த­மாக இழந்து, இது­வ­ரை­யி­லான தன்­னு­டைய வாழ்­நாளில் பாதிக்கும் மேலான காலத்தைச் சிறையில் கழித்­தி­ருக்­கிறார். கடும் மன அழுத்­தத்­தோடு, நீரி­ழிவு நோய், சிறு­நீ­ரகத் தொற்று போன்ற உடல்­நலப் பிரச்­சி­னை­க­ளையும் எதிர்­கொண்டு வரு­கிறார்.

இந்தப் பின்­ன­ணியில், பேர­றி­வா­ளனின் தாயார் அற்­பு­தம்மாள் காணொளி ஒன்றை நேற்று வெளி­யிட்­டி­ருக்­கிறார்; அதில் அவர் பேசி­யி­ருப்­ப­தா­வது...“சிறை வாழ்க்­கை­யையே அவன் பய­னுள்­ளதா பயன்­ப­டுத்திக் கொண்டான். அவன் மட்­டுமே படிக்­காம, சிறை­வா­சிகள் நிறைய பேருக்குப் படிப்­ப­றிவு கொடுத்தான். இருந்­தாலும் அவன் சுதந்­தி­ரமா வாழக்­கூ­டிய வாழ்க்கை இல்­லைங்­கி­ற­துதான் எனக்குக் கவ­லையா இருக்கு. என் மக­னோட இளமை, நிம்­மதி எல்லாம் இந்த 30 ஆண்­டுகள் சிறை வாழ்க்­கைல போயி­டுச்சு; ஒட்­டு­மொத்­தமா குடும்­பத்தின் நிம்­ம­தியே போச்சு.

இந்த முப்­பது ஆண்டு சிறை வாழ்க்கை என் மக­னுக்குப் பல­வித நோய்­களைக் கொடுத்­தி­ருக்கு. அதுக்கு தொடர் மருத்­துவம் அவ­னுக்குக் கிடைக்­கல. நான் எவ்­வ­ளவோ முயற்சி பண்ணேன். சில மருத்­துவம் அவ­னுக்கு அப்­பப்போ கிடைச்­சது. ஆனால், தொடர்ந்து மருத்­துவம் பார்க்க முடி­யாம போச்சு. அதனால் தொடர்ந்து அவன் உடல்­நிலை பாதிக்­கப்­ப­டுது.

இந்த நிலை­யில உல­கத்­தையே அச்­சு­றுத்­துற கொரோனா வந்­தது. உடல்­ந­ல­மில்­லாத என் மக­னுக்கு அதைத் தாங்­குற சக்தி இல்­ல­யேனு தவிச்­சிட்டு இருந்தேன். உச்ச நீதி­மன்­றமே சிறை­வா­சி­களைக் குறைக்­க­ணும்னு சொன்­னப்போ மகிழ்ச்சி அடைஞ்சேன். உடனே அர­சுக்கு விண்­ணப்­பிச்சேன். தமிழ்­நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் என் கோரிக்­கையை ஏத்­துக்­கிட்­டாங்க. என் மக­னோட உடல்­நி­லையை கவ­னிக்க வேண்­டி­யது அவ­சி­யமா இருக்கு. தொடர்ந்து மருத்­துவ சிகிச்சை தேவையா இருக்கு.

இனிமேல் என் மகன் சிறைக்குப் போகக் கூடாது. 30 ஆண்­டு­களாகின்­றது, எவ்ளோ பெரிய நீண்ட சிறை தண்­ட­னைங்­கி­றத உணர்ந்த தாயாக நான் சொல்­கிறேன் - நீங்க (முதல்வர்) இதுக்கு மேல என் மகனை சிறைக்கு அனுப்­பாம பாத்­துக்­கணும். என் பையன் நிர­ப­ரா­தினு அதி­காரி தியா­க­ராஜன், நீதி­பதி கே.டி. .தோமஸ், நீதி­ய­ரசர் கிருஷ்­ணய்­யர்னு நிறைய பேர் குரல் கொடுத்தாங்க; மக்கள் ஆதரவு தெரிவிச்சாங்க. ஆனா, என் மகனுக்கு இன்னும் வெளியுலக வாழ்க்கை கிட்டல. இழந்ததெல்லாம் யாராலயும் திருப்பித் தர முடியாது. இந்த வயசான காலத்துயாவது எங்க புள்ள எங்களோட இருக்கணும்ங்கிற கோரிக்கைய அரசுக்கு வைக்கிறேன்” - அற்புதம்மாளின் குரலில் காலங்களை மீறிய வேதனையின் கனம்.

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பாக, தொடர்ச்சியாகக் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பேரறிவாளனின் சிறைவாசம் 31 ஆவது ஆண்டை எட்டியிருக்கும் நிலையில், விடுதலை குறித்த நடவடிக்கைகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right