(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பில் தீவிபத்திற்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூலம் கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களை கணிப்பிடுவதற்கு ஒத்துழைப்பினை வழங்குவதற்காக இந்திய கடற்படையின் ஆய்வு கப்பலான சர்வேக்ஷாக் வியாழக்கிழமை கொழும்பை வந்தடைந்தடைந்தது.

இக்கப்பலின் வருகையானது இரு அயல் நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் மற்றும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நட்புறவில் மற்றொரு வெற்றிகரமான அத்தியாயமாக அமைந்துள்ளது. 

இக்கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சைட் ஸ்கான் சோனர் உட்பட ஆய்வு உபகரணங்கள் பொருத்தப்பட்டதாகும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் கடற்பயணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் ஐ.என்.எஸ் சர்வேக்ஷாக் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (நாரா), இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றின் ஒன்றிணைவில் இந்தக் கூட்டு ஆய்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த ஆய்வுப் பணியில் மேலதிக திட்டங்கள் குறித்து இன்று வெள்ளிக்கிழமை திட்டமிடல் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில் நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.நவரட்னராஜா, நாரா பணிப்பாளர் நாயகம் டாக்டர் எச்.எம்.பி.கித்சிறி, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூத் மற்றும் இலங்கை கடற்படையின் கப்டன் விஜேசூரிய ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

ஒபரேஷன்சாகர் ஆரக்‌ஷா 2 இன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இக்கூட்டு நடவடிக்கை இப்பிராந்தியத்தில் பாதுகாப்பான கடற்பயணத்துக்கு உறுதுணையாக இருக்கும் அதேநேரம், இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்படும் இதுபோன்ற அனர்த்தங்களை தணிப்பதற்கு விரைந்து ஆதரவினை வழங்குவதற்கான இந்தியாவின் அயலவர்களுக்கு முதலிடம் கொள்கையை மேலும் வலுப்படுத்துவதாக அமைவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.