(எம்.எப்.எம்.பஸீர்)

53 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க  காலி நீதிமன்றம் இன்று உத்தர்விட்டுள்ளது.

காலி  நீதவான் ஹர்ஷன கெக்குனுவல  இந்த உத்தர்வை பிறப்பித்துள்ளார்.

 

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில்  வழக்கு நெறிப்படுத்தல் பிரிவுக்கு பொறுப்பாக கடமையாற்றிய 52 வயதான  உப பொலிஸ்  பரிசோதகர் ரி. சனத் குமார டி சில்வா, கொழும்பு 15, மட்டக்குளி - அளுத் மாவத்தையை சேர்ந்த ராமையா சண்முகநாதன்,  ஜா எல - ஏக்கல வீதியைச் சேர்ந்த  யோகராஜா அருள்நாத்  ஆகியோரையே இவ்வாறு  விளக்கமரியலில் வைக்கப்ப்ட்டுள்ளனர்.

 50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  இன்று வரை  தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பான விசாரணை நிறைவு பெறவில்லை என போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு  இன்று அறிக்கை சமர்ப்பித்தனர்.

 இந் நிலையில், சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகரின் குறித்த போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் மேலும் 10 தொலைபேசி இலக்கங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளதால் அதற்கான அனுமதியை போதைப் பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் கோரினர். அதற்கு நீதிமன்றம் அனுமதியலித்தது.

சந்தேகநபரான உப பொலிஸ்  பரிசோதகர் இதற்கு முன்னரும் சீருடையுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அதிகாரிகள்,  சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்கும் போது,, ஏனைய சந்தேகநபர்களை தனியாக வைக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரினர்.

இந் நிலையிலேயே சந்தேக நபர்கள் எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.