இந்த ஆண்டு இறுதிக்குள் ஜின்ஜியாங் மாகாணத்திற்கு விஜயம் செய்வதற்காக சீனாவுடனான உடன்படிக்கைகளை முன்னெடுப்பதற்கான அணுகுமுறைகளை மேற்கொள்வதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் தெரிவித்தார்.  

ஆதிகரித்து வரும் சர்வதேச அழுத்தங்கக்கு மத்தியில் ஜின்ஜியாங்கிற்கான விஜயத்தினைச் செய்வதற்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் பரிந்துரைத்து நடவடிக்கைகளை எடுத்த முதல் சந்தர்ப்பம் இதுவாக பார்க்கப்படுகின்றது. 

இவ்வாறிருக்க, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 47ஆவது அமர்வில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், ஐ.நா. ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர் இன முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்துவரும் தன்னாட்சி பிராந்தியத்திற்கு விஜயம் செய்வதற்கு உள்ள வழிமுறைகள் தொடர்பில் சீனாவுடன் பேச்சக்களை ஆரம்பித்துள்ளதாக கூறினார். 

“ஜின்ஜியாங் உய்குர் இன முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தன்னாட்சி பிராந்தியத்திற்கு தனியாக வருகை தருவதற்காக அர்த்தமுள்ள அணுகுமுறைகளை சீனாவுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றேன்.

குறிப்பாக, இந்த ஆண்டில் அந்த இலக்கினை அடைய முடியும் என்று நம்புகின்றேன். அந்தப் பிராந்தியத்தில் கடுமையான மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. ஆகவே நேரடியாக அங்கு விஜயம் செய்வதே சாலச்சிறந்த முறையெனக் கருதுகின்றேன்” என்று குறிப்பிட்டார். 

இவ்வாறிருக்க, இந்த மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் அறிக்கையின் பிரகாரம், கசாக் மற்றும் ஜின்ஜியாங்கில் உள்ள பெரும்பான்மையான உய்குர் இன முஸ்லிம்கள் சீன அரசால் ஒழுங்கமைக்கப்பட்ட வெகுஜன சிறைவாசம், சித்திரவதை மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, இந்தப் பிராந்தியத்தின் முஸ்லிம் இனக்குழுக்களின் மத மரபுகள், கலாசார நடைமுறைகள் மற்றும் உள்ளூர் மொழிகளை வேரறுக்க 2017 முதல் சீன அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் முன்னாள் கைதிகளிடமிருந்து டசின் கணக்கான புதிய சாட்சியங்களை மனித உரிமைகள் குழு வெளியிட்டது.

அத்துடன் “பயங்கரவாதத்தை" எதிர்த்துப் போராடும் போர்வையில் உய்குர்கள், கசாக், ஹுய், கிர்கிஸ், உஸ்பெக்ஸ் மற்றும் தாஜிக்கர்களை குறிவைத்து முன்னெடுக்கப்பட்டுள்ள என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. 

இதற்கிடையில், சீனா கடுமையான கண்டனங்களை வெளியிட்ட ஜி-7 நாடுகள் அதற்கு பதிலளிக்கும் முகமாக ஹொங்கொங் மற்றும் ஜின்ஜியாங்கில் “மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை சீனா மதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளன. 

அத்துடன், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதிப்பதற்கு அப்பால், சீன -பிரித்தானிய கூட்டு பிரகடனத்தின் பிரகாரம் அடிப்படை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஹொங்கொங்கிற்கு அதிக அளவு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. 

எனினும், வழமைபோன்றே சீனா இந்தக் கருத்துக்களை நிராகரித்ததோடு “சிறிய நாடுகளின் குழு உலகின் தலைவிதியை தீர்மானித்த நாட்கள் கடந்து நீண்ட காலமாகிவிட்டன” என்று மட்டும் பதிலளித்துள்ளது.