(லியோ நிரோஷ தர்ஷன்)

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். ஆளும் கட்சிக்குள் பல்வேறுப்பட்ட முரண்பாடுகள் மேலோங்கியுள்ள நிலையில் இவரது வருகை குறித்து பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் அறுதல் அடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 6 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பெசில் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளதாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இவர் பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவித்த அவர் எரிப்பொருள் விலையை மீண்டும் குறைத்து  அரசாங்கம் தொடர்பில் சிறந்த பிம்பத்தை உருவாக்குவது இவரது தற்போதைய நோக்கமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எரிப்பொருள் விலையேற்றத்தின் நியாய தன்மையை ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதனை மீண்டும் குறைப்பது என்பது அரசாங்கத்திற்குள் காணப்படும் நெருக்கடிகளை வெளிப்படுத்துவதாக அமைவதுடன் நம்பக தன்மைக்கும் சவாலாகி விடும் எனவும் தெரிவித்தார்.

எனவே பசில் ராஜபக்ஷ  பாராளுமன்ற உறுப்பினராகி அமைச்சராவது என்பது ஆளும் கட்சிக்குள் எரியும் தீயில் பெட்ரோலை ஊத்துவதாகவும் அமையலாம் அல்லது சிதறியுள்ள கட்சியை ஒன்றிணைப்பதாகவும் அமையலாம் என்பதே  பலரினதும் கணிப்பாகின்றது.